மறுபிறவி எடுத்த 'ஃபீனிக்ஸ் கோள்': இறந்த விண்மீனைச் சுற்றி வரும் அரிய கோள் கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
வானியலாளர்கள் விண்வெளியில் 'ஃபீனிக்ஸ் கோள்' என பெயரிடப்பட்டுள்ள அரிய இரண்டாம் தலைமுறை கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு சுமார் 790 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள HS 0209+0832 என்ற மடிந்த வெள்ளை குள்ள நட்சத்திரத்தை இக்கோள் சுற்றி வருகிறது. வெள்ளை குள்ள நட்சத்திரத்தை சுற்றி இரண்டாம் தலைமுறை கோள் ஒன்று அமைந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பது வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.
விவரம்
இரண்டாம் தலைமுறை கோள் என்றால் என்ன?
ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாளின் இறுதியில் மடியும்போது வெளித் தள்ளும் எஞ்சியப் பொருட்களிலிருந்து (Protoplanetary disk) உருவாகும் கோள்கள் 'இரண்டாம் தலைமுறை கோள்கள்' என அழைக்கப்படுகின்றன.
"இறந்த நட்சத்திரத்தின் எஞ்சியப் பொருட்களிலிருந்து உருவாகும் இத்தகைய கோள்கள் மிகவும் அரிதானவை. ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி இத்தகைய கோள் அமைந்திருப்பது முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்று" என வார்விக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜேமி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்னும் சுமார் 600 கோடி ஆண்டுகளில் நமது சூரியனும் ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரமாக மாறும் என்பதால், இக்கண்டுபிடிப்பு சூரிய குடும்பத்தின் எதிர்காலத்தை புரிந்துகொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வளிமண்டலம்
விசித்திரமான வளிமண்டலமும் சுற்றுப்பாதையும்
HS 0209+0832 நட்சத்திரத்தின் வளிமண்டலத்தில் துத்தநாகம், செம்பு மற்றும் நைஓபியம் ஆகிய தனிமங்கள் சூரியனில் உள்ளதை விட 1,000 மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.
சிவப்பு அரக்கன் (Red giant) கட்டத்தின் போது உருவான கோளிலிருந்து இந்த நட்சத்திரம் தன் ஈர்ப்பு விசையால் பொருட்களை ஈர்த்து வருவதையே இது காட்டுகிறது.
நாசாவின் TESS செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்த வாயு ராட்சதக் கோள் தன் தாய் நட்சத்திரத்தை சுற்றி வர வெறும் 4.4 பூமி நாட்களையே எடுத்துக்கொள்கிறது என்பது தெரியவந்துள்ளது.