இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
இந்தியாவின் இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. நாட்டின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க்குகளில் அதிகரித்து வரும் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க, பாஜகவின் ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகளின் முக்கிய அம்சமாக, சைபர் பாதுகாப்பிற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையமானது, வலுவான இணையப் பாதுகாப்புக் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கி செயல்படுத்துவதற்கான முக்கியப் பொறுப்பை ஏற்கும்.
டிஜிட்டல் நிதி துறையில் வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வரும் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், டிஜிட்டல் கடன் முகைமைகள் (டிஎல்ஏக்கள்) மற்றும் பிற நிதி இடைத்தரகர்களுக்கான அனுமதிப்பட்டியல் கட்டமைப்பை உருவாக்க நாடாளுமன்ற குழு பரிந்துரைக்கிறது. இந்த நடவடிக்கையானது மோசடியான நடவடிக்கைகளை எதிர்த்து, டிஜிட்டல் கடன் வழங்கும் துறையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சூழலை உருவாக்குகிறது. மேலும் சைபர் மோசடியில் சிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கும் பொறுப்பை நிதி நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சைபர் மோசடிக்கு ஆளாகும் அப்பாவி வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சுமைகளைக் குறைப்பதே இத்தகைய நடவடிக்கையின் நோக்கமாகும்.