ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்!
20 ஆண்டு காலமாக இல்லாத வகையில், ஒரே நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரன பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 9.6 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. கொரோனா காரணமாக பல நாடுகள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி ரஷ்யா-உக்ரைன் போன்ற நிகழ்வுகளால் உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதாரத்தில் செம்ம அடி வாங்கியது. இதனால், வளர்ந்த நாடுகளே நிலைமையை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின. இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் பாதிப்பை கண்டுள்ளது. உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு விலைவாசி 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
20 வருடங்களில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வீழ்ச்சி
அதிலும், அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையே 62 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனிடையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு பாகிஸ்தானின் ரூபாய் படி 255 என்ற அளவில் வீழ்ச்சி அடைந்ததால் பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தனது மோசமான பொருளாதார சரிவை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட முன்னணி நிதி அமைப்புகளின் கடனுதவியை பாகிஸ்தான் அரசு எதிர்பார்த்து உள்ளது.