Loading...
மனிதர்களின் உதவியே இல்லாமல் ஆஸ்திரேலிய அரசுத் தளத்தை ஹேக் செய்த ஓபன்ஏஐ ஏஜென்ட்; பகீர் தகவல்
ஆஸ்திரேலிய அரசு தளத்தை ஹேக் செய்தது ஓபன்ஏஐ ஏஜென்ட்

மனிதர்களின் உதவியே இல்லாமல் ஆஸ்திரேலிய அரசுத் தளத்தை ஹேக் செய்த ஓபன்ஏஐ ஏஜென்ட்; பகீர் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 24, 2026
10:44 am

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பொது சுகாதார புள்ளிவிவரங்கள் மற்றும் மருத்துவ செலவினத் தரவுகளை நிர்வகிக்கும் ஹெல்த் போர்ட்டல் தளத்திற்குள், ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ ஏஜென்ட் ஒன்று கடந்த ஜூன் மாதத்தில் தன்னிச்சையாக அத்துமீறி புகுந்துள்ளது. மனிதர்களின் வழிகாட்டுதல் இன்றி ஏஐ ஏஜென்ட் ஒன்று அரசாங்க இணையதளத்தை ஊடுருவியது இதுவே முதன்முறையாகும். நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐநா பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இச்சம்பவத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் கண்டித்துள்ளார்.

கண்டனம்

இரண்டு மாத கால தாமதமும் ஆஸ்திரேலிய பிரதமரின் கடும் கண்டனமும்

இந்த ஊடுருவல் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அரசுக்குத் தெரிவிப்பதில் ஓபன்ஏஐ நிறுவனம் மிகப்பெரிய கால தாமதத்தை செய்துள்ளது.

ஜூன் மாதத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து, செப்டம்பர் 10 அன்றே ஆஸ்திரேலிய அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனிடம் தனது தீவிரக் கவலையையும் அதிருப்தியையும் பிரதமர் அல்பானீஸ் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அரசின் சைபர் பாதுகாப்புத் தளங்கள் இதை ஏன் முன்கூட்டியே கண்டறியவில்லை என்பது குறித்தும் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓபன்ஏஐ விளக்கம்

நோயாளிகளின் விவரங்கள் திருடப்படவில்லை என ஓபன்ஏஐ நிறுவனம் விளக்கம்

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஓபன்ஏஐ நிறுவனம், தங்கள் ஏஐ மாடல்கள் இணையத்தில் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த அத்துமீறல் நடந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், எந்தவொரு நோயாளியின் தனிப்பட்ட மருத்துவ ஆவணங்களோ அல்லது ரகசியத் தகவல்களோ அணுகப்படவில்லை என்றும், வெறும் பொதுவான சுகாதார புள்ளிவிவரங்கள் மற்றும் உள் கோப்புகளின் பெயர்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மேலும், வேறு மூன்று அரசுத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அச்சுறுத்தல்

உலகளவில் அதிகரிக்கும் ஏஐ ஏஜென்ட்களின் அச்சுறுத்தல்களும் விதிகளும்

சமீபகாலமாக ஏஐ ஏஜென்ட்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறித் தன்னிச்சையாக இணையதளங்கள், தரவுத்தளங்கள் மற்றும் சேவைகளில் ஊடுருவும் சம்பவங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் ஜூலை மாதத்தில் ஹக்கிங் ஃபேஸ் தளத்திலும் இதேபோன்று ஓபன்ஏஐ ஏஜென்ட் அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆந்த்ரோபிக், கூகுள் மற்றும் மெட்டா போன்ற பிற முன்னணி நிறுவனங்களின் ஏஐ கருவிகளும் இதுபோன்ற கட்டுப்பாடற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால், ஏஐ தொழில்நுட்பத்திற்குக் கடுமையான சர்வதேசக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வருகிறது.

ADVERTISEMENT