OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்
டிஜிட்டல் வகையில் பல்வேறு வழிகளிலும் நம்முடைய பணத்தைத் திருட மோசடி நபர்கள் சுற்றி வரும் நிலையில், நம்முடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது. OTP மற்றும் லிங்க்குள் எதுவுமின்றி பெங்களூருவிலிருக்கும் பெண் ஒருவரின் டிஜிட்டல் 'வாலட்டில்' இருந்து ரூ.1 லட்சம் பணத்தை மோசடி நபர்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள். தான் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்யவில்லை, யாருடனும் OTP-யை பகிர்ந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் அந்தப் பெண். பிறகு எப்படி அந்தப் பெண்ணில் 'டிஜிட்டல் வாலட்டி'ல் இருந்த பணத்தை மோசடி நபர்களால் கொள்ளையடிக்க முடிந்தது?
புதிய வகையில் ஆன்லைன் மோசடி:
அந்தப் பெண் காரில் வந்து கொண்டிருக்கும் போது, புதிய எண் ஒன்றில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதனை எடுத்து அவர் பேசிய போது, தான் ஒரு பட்டய கணக்காளர் என்றும், அந்தப் பெண்ணுடைய அப்பாவின் நண்பர் என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து, அவருடைய அப்பா அந்தப் பெண்ணில் கணக்கிற்கு குறிப்பிட்ட அளவு பணத்தை அனுப்பச் சொல்லியிருக்கிறார் என்றும், அதற்கு அந்தப் பெண்ணின் யுபிஐ ஐடி தேவை என்றும் கேட்டிருக்கிறார். அந்தப் பெண்ணும் தன்னுடைய யுபிஐ ஐடியைப் பகிர, போன்பே மூலம் அந்த ஐடியில் பணம் செலுத்தப்பட்டுவிட்டதாகக் போன்பே மூலமாகவே குறுஞ்செய்தியாகப் கூறியிருக்கிறார் அந்த மோசடி நபர்.
ரூ.1 லட்சம் மோசடி:
மேலும், போன்பேயில் பணம் அனுப்பியிருப்பதாகக் கூறி, சரிபார்க்கச் சொல்லி அந்தப் பெண்ணை வற்புறுத்தியிருக்கிறார் அந்த நபர். அப்படி சரி பார்க்கும் போது தான், அந்தப் பெண்ணில் வாலட்டிலிருந்து இரண்டு முறை ரூ.25,000-மும், ஒருமுறை ரூ.50,000 பணமும் எடுக்கப்பட்டிருக்கிறது, அதுவும் OTP எதுவுமே இல்லாமல். அந்தப் பெண் அளித்த தகவல்களின்படி, பணம் வந்து விட்டதா என மோசடி நபர் சரிபார்க்க வற்புறுத்தும் போது, போன்பேயில் தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை அந்தப் பெண்ணை கிளிக் செய்ய வைத்திருக்கிறார். அதன் மூலமே அந்தப் பெண்ணின் பணத்தை திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் பெங்களூரு காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.