50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய பயணம்: வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் பெரேக்ரின் லேண்டர்
திங்களன்று(ஜனவரி 8) அமெரிக்காவின் கேப் கனாவெரலில் இருந்து 'பெரேக்ரின் லேண்டர்' என்னும் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சுமார் 20 பேலோடுகளுடன் கூடிய 90 கிலோ எடை கொண்ட பெரெக்ரைன் லேண்டர் சந்திர மேற்பரப்பில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேலோடுகளில் ஐந்து நாசா கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சாதனை படைக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டவைகளாகும்.
அதில் பொருத்தப்பட்டிருக்கும் நாசா கருவிகளின் விவரங்கள்:
1. கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்கும் லீனியர் எனர்ஜி டிரான்ஸ்ஃபர் ஸ்பெக்ட்ரோமீட்டர்(LETS) 2. சந்திர மண்ணின் கலவையை பகுப்பாய்வு செய்யும் நியர்-இன்ஃப்ராரெட் வோலேடைல் ஸ்பெக்ட்ரோமீட்டர் சிஸ்டம்(NIRVSS) 3. நிலவின் மண்ணில் உள்ள தண்ணீரைக் கண்டறிய நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர் சிஸ்டம்(NSS) 4. மெல்லிய சந்திர வளிமண்டலத்தை ஆராய பெரெக்ரைன் அயன்-ட்ராப் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்(PITMS) 5. எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவும் துல்லியமான இருப்பிடக் குறிப்பான் லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரே(LRA) இந்த கருவிகள் நாசாவின் லூனார் வல்கன் இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி எக்ஸ்ப்ளோரர் இன்ஸ்ட்ரூமென்ட் தொகுப்பிற்கு மதிப்புமிக்க தரவை வழங்க இருக்கிறது.
எவரெஸ்ட் சிகரத்தின் நினைவு சின்னத்தை நிலவுக்கு அனுப்பி இருக்கும் அமெரிக்கா
இந்த விண்கலத்தில் ஆராய்ச்சிக்கு தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல், பூமியின் நினைவு சின்னங்கள் சிலவும் அனுப்பப்பட்டுள்ளன. விக்கிபீடியாவின் நகல், பிட்காயின், முக்கிய புகைப்படங்கள் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தின் துண்டு போன்ற வழக்கத்திற்கு மாறான பொருட்களையும் ஏந்திக்கொண்டு இந்த விண்கலம் நிலவுக்கு புறப்பட்டுள்ளது. அது போக, முக்கிய விண்வெளி நினைவு நிறுவனங்களான எலிசியம் ஸ்பேஸ் மற்றும் செலஸ்டிஸ் ஆகியவை தகனம் செய்யப்பட்ட எச்சங்களும், சில முக்கிய நபர்களின் டிஎன்ஏ மாதிரிகளும் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும், இப்படிப்பட்ட பொருட்களை நிலவுக்கு அனுப்புவதால் ஏற்படும் தாக்கங்கள் எப்படி இருக்குமோ என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. பெரெக்ரைன் லேண்டர் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி நிலவின் சைனஸ் விஸ்கோசிடாட்டிஸ் என்ற பகுதியில் தரையிறங்க உள்ளது.