புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தவிருக்கும் நத்திங்கின் துணை பிராண்டான CMF
ஒன்பிளஸ் பானியிலேயே புதிய திட்டங்களுடன் எலெக்ட்ரானிக் சாதனத் (கேட்ஜட்ஸ்) தயாரிப்புச் சந்தையில் களமிறங்கியது நத்திங். ஒன்பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான கார்ல் பெய்யே நத்திங் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாகவும் நியமிக்கப்பட, புதுமையான எலெக்ட்ரானிக் சாதனங்களை வெளியிடத் தொடங்கியது அந்நிறுவனம். முதலில் இயர்பட்ஸ்களில் தொடங்கி, தற்போது இரண்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மூன்று இயர்பட்ஸ்களை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ப்ரீமியம் சாதனங்களை விட கொஞ்சம் குறைவான விலையில் தங்களுடைய எலெக்ட்ரானிக் சாதனங்களை வெளியிட்டு வருகிறது அந்நிறுவனம். மேலும், தனக்கென 'வெளிப்படைத்தன்மை'யுடன் கூடிய ஒரு டிசைன் லாங்குவேஜையும் அந்நிறுவனம் தற்போது வரை அதன் சாதனங்களில் கையாண்டு வருகிறது. இந்நிலையில், அனைவரும் வாங்கும் விலையில் எலெக்ட்ரானிக் தயாரிப்புகளை வழங்க புதிய துணை பிராண்டு ஒன்றை அறிமுகப்படுத்தியது நத்திங்.
CMF பை நத்திங்:
CMF (Color, Material & Finish) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த துணை பிராண்டின் கீழ், பட்ஜெட் விலையை விட சற்றுக் கூடுதலான விலையில் புதிய தரமான சாதனங்களை அறிமுகப்படுத்துவது தான் நத்திங்கின் திட்டம். இந்த துணை பிராண்டானது நத்திங் நிறுவனத்திடமிருந்து தனித்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய சாதனங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. Alchimist_1 என்ற எக்ஸ் பயனர் ஒருவர் CMF நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் குறித்த தகவல்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பகிர்வின் படி, புதிய ஸ்மார்வாட்ச், ஏர்பட்ஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் ஒன்றை CMF நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிகிறது.
CMF-ன் புதிய அறிமுகங்கள்:
CMF வாட்ச் ப்ரோ எனப் பெயரிடப்பட்டிருக்கும் ஸ்மார்ட்வாட்ச்சில், ஒரு ஸ்மார்ட்வாட்ச்சுக்கு உண்டான அனைத்து வசதிகளையும் அளித்திருக்கிறது CMF. இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ரூ.4,499 விலையில் அந்நிறுவனம் வெளியிடலாம். இத்துடன் 37 மணி நேர பேட்டரி பேக்கப்புடன் கூடிய CMF பட்ஸ் ப்ரோ மற்றும் அனைத்து ஸ்மார்ட்போன்களுடனும் பயன்படுத்தும் வகையிலான 65W ஃபாஸ்ட் சார்ஜர் ஆகியவற்றையும் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் பட்ஸ் ப்ரோவை ரூ.3,499 விலையிலும், ஃபாஸ்ட் சார்ஜரை ரூ.2,499 விலையிலும் அந்நிறுவனம் வெளியிட வாய்ப்புகள் இருக்கின்றன. மேற்கூறிய சாதனங்களை வரும் செப்டம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்த அந்நிறுனம் திட்டமிட்டிருப்பதாகவும், இணையத்தில் தகவல் கசிந்திருக்கிறது. இந்த சாதனங்கள் என்ன விதமான புதுமைகளைக் கொண்டிருக்கிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.