இந்தியாவில் MRP-யை விட கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் புதிய ஐபோன்15
மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை குறைவு தான் என்றாலும், ஐபோனுக்கென தனி ரசிகர் வட்டம் இந்தியாவிலும் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி, உலகமெங்கும் தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள். இந்த சீரிஸின் கீழ் ஐபோன் 15, ஐபோன் 15 ப்ளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஐபோன் மாடல்களை வெளியிட்டிருந்தது ஆப்பிள். இந்தியாவில் இந்த மாடல்களின் விற்பனையானது கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் புதிய ஐபோன்களுக்கு இருக்கு அதிக டிமாண்டு காரணமாக, ஆன்லைனிலும் சரி ஆஃப்லைனிலும் சரி உடனுக்குடன் ஐபோன்கள் விற்றுத் தீர்கின்றன.
சந்தர்பத்தை சாதகமாக்கிக் கொள்ளும் வியாபாரிகள்:
இந்தியாவில் புதிய ஐபோன் சீரிஸூக்கு இருக்கும் டிமாண்டை பயன்படுத்தி, கூடுதல் விலையில் ஐபோன்களை விற்பனை செய்து வருகின்றனர். மூன்றாம் தரப்பு சில்லறை வணிகக்கடைகளில் ஐபோன் 15 சீரிஸின் டாப்-எண்டான ப்ரோ மேக்ஸ் மாடலை அதிகபட்சமாக ரூ.20,000 கூடுதல் விலையில் வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியாகியிருக்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகவே மிக அதிக விலையிலேயே ஐபோன் வெளியாகி வருகிறது. அமெரிக்காவில் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தில் வெளியான ப்ரோ மேக்ஸ் மாடல், இந்தியாவில் ரூ.1.44 லட்சம் விலையில் வெளியாகியது. இந்நிலையில், அதனை விட கூடுதலான விலையில் ஐபோன்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும்போதும், அதனை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதாகவே கூறப்படுகிறது.
ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டின் போதும் இதே நிலை:
கடந்தாண்டு ஐபோன் 14 சீரிஸ் வெளியான போதும் இந்தியாவில் இதே நிலையே இருந்தது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு விலையை விட இந்தியாவில் கூடுதல் விலையில் ஐபோன்களை விற்பனை செய்து வந்தனர். ஆனால், அப்போது கொரோனா பெருந்தொற்று மற்றும் ஃபாக்ஸ்கான் விநியோக சங்கிலி பிரச்சினை என நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டிடு வந்தது ஆப்பிளும், உலகமும். தற்போது அப்படி எந்த பிரச்சினைகளும் இல்லாத போதும், புதிய ஐபோன் சீரிஸூக்கான டிமாண்டு அதிகமாகவும், விநியோகம் குறைவாகவுமே இருக்கிறது. முக்கியமாக புதிய ஐபோன்களுக்கு மெட்ரோ நகரங்களில் மிக அதிகமான டிமாண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. சில மூன்றாம் தரப்பு ஆன்லைன் விற்பனையாளர்கள், 15 ப்ரோ மேக்ஸின் 1TB ஸ்டோரேஜ் கொண்ட மாடலை, ரூ.32,000 அதிகமாக ரூ.2.32 லட்சம் விலையில் விற்பனைக்காக பட்டியலிட்டிருக்கின்றனர்.