நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது
செய்தி முன்னோட்டம்
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'க்ரூ-7' (Crew-7) திட்டமானது இன்று செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நாளை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக தள்ளி வைக்கப்பட்டது என்பது குறித்த காரணம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
இத்திட்டத்தின் கீழ், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளின் விண்வெளி அமைப்புகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட கால இடைவெளியில், தொடர்ந்து சர்வதேச விண்வெளியில் நிலையத்தில் உள்ள வீரர்களை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், ஏழாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை தங்கள் விண்கலம் மூலம் அழைத்துச் செல்கிறது ஸ்பேஸ்எக்ஸ்.
விண்ணில் ஏவுவதற்காக ராக்கெட்டும், திட்டக் குழுவினரும் திட்டத்திற்குத் தயாராக இருப்பதாகவே தெரிவித்திருக்கின்றன நாசாவும், ஸ்பேஸ்எக்ஸும்.
ஸ்பேஸ்எக்ஸ்
எப்போது செயல்படுத்தப்படவிருக்கிறது?
இந்திய நேரப்படி நாளை நண்பகல் 12.57 மணிக்கு செயல்படுத்தப்படவிருக்கிறது க்ரூ-7 திட்டம். ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலத்தின் உதவியுடன், விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையவிருக்கின்றனர்.
க்ரூ-7 விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தை அடைந்து 5 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் அங்கு சென்ற க்ரூ-6 திட்டக் குழு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவிருக்கிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில், 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தொழிநுட்ப செயல் விளக்கங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது க்ரூ-7 குழு. நாளை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது ஃபால்கன் 9.