"6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த சிறப்புக் குழு"- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாடினார் பிரதமர் மோடி. அப்போது உலகளவில், மிகவும் மலிவான விலையில் இணைய வசதியை வழங்கும் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாகக் குறிப்பிட்டார் அவர்.
மேலும், 5G சேவை நாடு முழுவதும் அமல்படுத்துவதிலும் வேகமா செயல்பாடுகளை இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் தெரிவித்துள்ளார் அவர். தற்போது இந்தியாவின் 700 மாவட்டங்களில் 5G சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் 5G சேவை வழங்கப்படவிருக்கும் நிலையில், 6G தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வேலைகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.
இந்தியா
இந்தியாவில் 6G தொழில்நுட்பம்:
இந்தியாவில் 6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், அது குறித்த செயல்பாடுகளை மேற்கொள்ளவும் சிறப்புக் குழு ஒன்றை அமைத்திருப்பதாக இன்றைய சுதந்திர தின உரையில் தெரிவித்திருக்கிறார் பிரதமர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், டெல்லியின் பிரகதி மைதானத்தில் இந்தியாவின் 5G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் 5G சேவையை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
2022 இறுதியில் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பயனர்கள் 5G சேவையைப் பயன்படுத்தத் தொடங்கியதாக எரிக்ஸன் நிறுவனம், தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் 5G சந்தையாகவும் இந்தியாவைக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.