36 மணி நேர தடைக்குப் பிறகு Outlook, Teams மற்றும் Copilot சேவைகளை முழுமையாக மீட்டது மைக்ரோசாஃப்ட்
செய்தி முன்னோட்டம்
உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களை பாதித்த மைக்ரோசாஃப்ட் 365 சேவைத் தடை 36 மணி நேரத்திற்கும் மேலான தீவிர பணிகளுக்கு பிறகு முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளது. நவம்பர் 12 வியாழக்கிழமை எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் மின்னஞ்சல் அணுகலில் தொடங்கிய இந்தக் கோளாறு, விரைவில் அவுட்லுக் (Outlook), டீம்ஸ் (Teams), கோபைலட் (Copilot), ஷேர்பாயிண்ட் (SharePoint) மற்றும் பிளானர் (Planner) உள்ளிட்ட முக்கிய அலுவலகக் கருவிகளுக்கும் பரவியது. தற்போது அடிப்படைத் தொழில்நுட்ப சிக்கல் சரிசெய்யப்பட்டு அனைத்து சேவைகளும் சனிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் அல்ல
நெட்வொர்க் மாற்றத்தால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என விளக்கம்
இந்த திடீர் முடக்கம் காரணமாகப் பல்வேறு நாடுகளில் ஹேக்கர்களின் சைபர் தாக்குதல் நடந்திருக்கலாமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முந்தைய நெட்வொர்க் திறன் மேம்படுத்தலுடன் தொடர்புடைய தொழில்நுட்பக் கோளாறு, சமீபத்திய நெட்வொர்க் மாற்றத்திற்குப் பிறகு வெளிப்பட்டதே இந்தப் பாதிப்புக்குக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தடைக்கும் சைபர் தாக்குதலுக்கோ அல்லது செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
70 நாடுகளில் முடங்கிய நிறுவனங்கள்
இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏஐ நிறுவனங்கள் பாதிப்பு
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கத்தால் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் கடும் சிரமத்தை சந்தித்தன.
இந்தியாவில் இண்டிகோ விமான நிறுவனம் தனது வாடிக்கையாளர் மின்னஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்கு இணையதளம் அல்லது செயலியைப் பயன்படுத்துமாறும் அறிவித்தது.
ஏர் இந்தியா தனது மின்னஞ்சல் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி நிலைமையைச் சமாளித்த நிலையில், ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய ஏஐ நிறுவனங்களின் மைக்ரோசாஃப்ட் இணைப்புகளும் பாதிக்கப்பட்டன.
மின்னஞ்சல் பாதுகாப்பு
வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய மைக்ரோசாஃப்ட் மற்றும் 48 மணி நேர மின்னஞ்சல் பாதுகாப்பு
அனைத்து அமைப்புகளையும் ஒரே நேரத்தில் இயக்காமல், ஒவ்வொரு கட்டமாக நிலைத்தன்மையை உறுதி செய்த பிறகே சேவைகளை படிப்படியாக மீட்டெடுத்ததாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
மேலும் தேங்கியுள்ள பழைய மின்னஞ்சல்கள் விடுபட்டுப் போகாமல் பயனர்களை சென்றடைவதை உறுதி செய்ய மின்னஞ்சல் கால அவகாசம் 48 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள மைக்ரோசாஃப்ட், இந்த சம்பவம் குறித்த முழுமையான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என உறுதியளித்துள்ளது.