நாசாவின் ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்!
பூமியில் இருக்கும் தொலைநோக்கிகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பல்வேறு சாதனைகளை, மைல்கற்களை படைத்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி. 1990-ல் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கியானது, இதுவரை 40,000 மேற்பட்ட விண்வெளி பொருட்களை நாம் ஆய்வு செய்ய உதவியிருக்கிறது. 33 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தன்னுடைய பணியை செய்து வரும் ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் இவை. ஒளிமயமான கேலக்ஸிகள்: சூப்பர்மேஸிவ் கருந்துளைகளால் ஈர்க்கப்பட்டு அதிக ஒளியை உமிழும் AM 1214-255 என்ற கேல்கஸிக்களை இந்த மாதத் தொடக்கத்தில் படம் பிடித்திருக்கிறது ஹபுள். அரிய கருந்துளைகள்: பூமியில் இருந்து 6000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கக்கூடிய, காண்பதற்கு அரிய நடுத்தர அளவுடைய கருந்துளை ஒன்றை சில நாட்களுக்கு முன்பு படம்பிடித்திருக்கிறது ஹபுள்.
அடர்த்தியான நட்சத்திரக் கொத்து:
பூமியிலிருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கக்கூடிய ஆஃபியூகஸ் விண்மீன் கூட்டத்தில் உள்ள NGC 6325 என்ற நட்சத்திரக் கொத்தைப் படம் பிடித்திருக்கிறது ஹபுள். இந்த நட்சத்திரக் கொத்தில் பல லட்சம் நட்சத்திரங்கள் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். கருந்துளை ஒன்றால் ஈர்க்கப்பட்டு இந்த நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் குழுமியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். ஜெல்லிமீன் கேலக்ஸி: பூமியில் இருந்து 650 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் டெலஸ்கோப்பியம் விண்மீன் கூட்டத்தில் இருக்கும் J0175 என்ற ஜெல்லிமீன் போன்ற தோற்றம் கொண்ட கேலக்ஸியைப் படம் பிடித்திருக்கிறது ஹபுள். இந்த கேலக்ஸியில் வாயு மற்றும் துகள்கள் சேர்ந்து எப்படி நட்சத்திரமாக உருவாகிறது என்பது குறித்து இன்னும் உன்னிப்பாக படம்பிடித்து காட்டியிருக்கிறது ஹபுள்.