பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிராண்டு தூதுவராக அறிவித்திருக்கும் BGMI
பப்ஜியின் இந்திய வடிவமான பிஜிஎம்ஐ (BGMI) ஆன்லைன் கேமின் பிராண்டு தூதுவராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அறிவித்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம். மேலும், ரன்வீர் சிங்கைக் கொண்டே பிளே ப்யூர் என்ற தங்களின் புதிய பிரச்சாரக் காணொளி ஒன்றையும் யூடியூபில் பகிர்ந்திருக்கிறது பிஜிஎம்ஐ. தகவல் பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் விளையாட்டிற்கு சிறுவர்கள் அடிமையாதல் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி 2021 செப்டம்பரில் பிஜிஎம்ஐ-யை தடை செய்தது இந்திய அரசு. அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களது செயல்பாடுகளைத் தகவமைத்து மீண்டும் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கியது பிஜிஎம்ஐ. மூன்று மாத தணிக்கைக் காலத்திற்குப் பிறகு, தற்போது இந்தியாவில் முழுமையாக எந்தத் தடையுமின்றி செயல்படத் தொடங்கியிருக்கிறது பிஜிஎம்ஐ.
கண்டிப்பான கட்டுப்பாட்டு நெறிமுறைகள்:
ரன்வீர் சிங்குடன் கைகோர்த்து இந்தியாவில் பிஜிஎம்ஐ விளையாட்டை பிரபலப்படுத்தும் அதே வேளையில், இந்த விளையாட்டிற்கு சிறுவர்கள் அடிமையாகாமல் இருக்கவும் பல்வேறு நடைவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது அந்நிறுவனம். 18 வயதிற்கும் கீழிருப்பவர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக மூன்று மணி நேரமும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளில் அதிகபட்மாக ஆறு மணி நேரம் வரை மட்டுமே பிஜிஎம்ஐ விளையாட்டை விளையாட முடியும் வகையில் வரம்பு நிர்ணயித்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், சிறுவர்கள் விளையாட்டில் அதிக தொகையை செலவழிக்காமல் தடுக்கும் வகையில், பேரண்டல் கண்ட்ரோல் வசதிகளையும் அந்நிறுவனம் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.