Jio vs Airtel vs Vi: ஸ்பேம் அழைப்பு புகார்கள் மிகக் குறைவாக பதிவான நெட்வொர்க் எது?
செய்தி முன்னோட்டம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2026-27 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 52.72 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கிலிருந்து உருவான தேவையற்ற வணிகத் தொடர்புகள் குறித்து 2,93,716 புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. மாறாக ஏர்டெல் நெட்வொர்க்கில் 3,52,062 புகார்களும், வோடபோன் ஐடியா (Vi) நெட்வொர்க்கில் 5,39,285 புகார்களும் பதிவாகியுள்ளன.
நடவடிக்கைக்குரிய புகார்கள்
நடவடிக்கைக்குரிய புகார்கள் மற்றும் ஸ்பேம் அனுப்புநர்களைத் தடை செய்வதில் நிறுவனங்களின் செயல்பாடு
பதிவான புகார்களில் நடவடிக்கை எடுக்கத் தகுதியானவையாக ஜியோவில் 1,72,622 புகார்களும், ஏர்டெல்லில் 1,86,013 புகார்களும், வோடபோன் ஐடியாவில் 3,19,629 புகார்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர் விதிமீறல்களில் ஈடுபட்ட 4,963 எண்களை ஜியோவும், 7,889 எண்களை ஏர்டெல்லும், 355 எண்களை வோடபோன் ஐடியா நிறுவனமும் ஓராண்டிற்குத் துண்டித்துள்ளன.
மேலும் 274 ஸ்பேம் அனுப்புநர்களையும் 1,506 எஸ்எம்எஸ் ஹெடர்களையும் தடை செய்து ஜியோ கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
DND சேவை
DND சேவைப் பதிவில் வோடபோன் ஐடியா முன்னிலை; ஜியோ வாடிக்கையாளர்கள் பின்தங்கியுள்ளனர்
அதேசமயம் தொந்தரவு செய்யாதே (DND) சேவையைப் பதிவு செய்த வாடிக்கையாளர்களின் சதவீதத்தில் வோடபோன் ஐடியா 32.7 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தில் 17.2 சதவீத வாடிக்கையாளர்களும், ஜியோவில் 10.7 சதவீத வாடிக்கையாளர்களும் மட்டுமே DND விருப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் பிற நெட்வொர்க்குகளிலிருந்து வந்த ஸ்பேம் அழைப்புகள் குறித்து 6,96,283 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஏஐ தொழில்நுட்பம்
நாடு முழுவதும் 15.29 லட்சம் ஸ்பேம் புகார்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் முக்கியப் பங்கு
கடந்த காலாண்டில் நாடு முழுவதும் பதிவான 71,401 கோடி அழைப்புகள் மற்றும் 70,228 கோடி குறுஞ்செய்திகளில் மொத்தம் 15.29 லட்சம் ஸ்பேம் புகார்கள் பதிவாகியுள்ளன.
இதில் 92.9 சதவீதப் புகார்கள் டிராய் DND செயலி மூலமாகவே பெறப்பட்டுள்ளன.
மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்புகள் 1,828 கோடி அழைப்புகள் மற்றும் 162 கோடி குறுஞ்செய்திகளை சந்தேகத்திற்கிடமான ஸ்பேம் என அடையாளம் கண்டு வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளன.