செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்!
பூமியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் செயல்முறையை பலநாடுகள் பின்பற்ற வருகின்றன. ஆனால், ஜப்பான் இதன் அடுத்த கட்டத்தை சோதனை செய்யவிருக்கிறது. பூமியில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், இரவு நேரங்களிலும், மேக சூழ்ந்திருக்கும் பகுதிகளிலும், அதிகம் மழை பெய்யும் பகுதிகளிலும் அதனை செயல்படுத்த முடியாது. எனவே, 24 மணி நேரம் சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விண்வெளியில் செயற்கைக்கோள்களில் சூரிய தகடுகளைப் பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயல்முறை சோதனை செய்து பார்க்கவிருக்கிறது ஜப்பான். இந்த சோதனையை க்யோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரின் தலைமையில் வரும் 2025-ம் ஆண்டு செயல்படுத்திப் பார்க்கவிருக்கிறது ஜப்பான்.
எப்படி சாத்தியம்?
சிறிய செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 36,000 கிலேமீட்டர்கள் என்ற குறைவான சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோள்கள் சூரியஒளியினை சேகரித்து, அதனை நுண்ணலை (Microwave) வடிவில் பூமிக்கு அனுப்பும். பூமியில் இருக்கும் நிலையங்கள் மூலம் அந்த நுண்ணலைகள் பெறப்பட்டு, பின்னர் அவை மின்சாரமாக உருமாற்றப்படும். இந்த நுண்ணலைகள் மேகங்களைக் கடந்து எளிதாகப் பயணிக்கும் திறன் கொண்டவை. கோட்பாடாக இரு ஒரு வெற்றிகரமான திட்டம். ஆனால், நிஜ உலகில் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக் குறி தான். ஒரு அணு உலைக்கு ஈடான மின்சாரத்தை இந்தத் திட்டத்தின் மூலம் தயாரிக்கு 4 சதுர கிலோமீட்டர்கள் அளவிற்கு சூரிய தகடுகள் தேவைப்படும். அதற்கு, 7.1 பில்லியன் டாலர்கள் வரை செலாவகும் என்பது குறிப்பிடத்தக்கது.