
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் 'ககன்யான்' திட்டத்தின் கீழ் ஆளில்லா ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதில் 'வயோமித்ரா' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ மனிதன் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர், "ககன்யான் திட்டத்தின் சோதனைகள் 85% நிறைவடைந்துள்ளன. இந்த ஆளில்லா ராக்கெட் பயணம் வெற்றியடைந்த பிறகு, அடுத்த இரண்டு ராக்கெட்டுகளும் ஆள் இல்லாமல் அனுப்பப்படும். அதன்பிறகு, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
AI
விண்வெளித்துறையில் செயற்கை நுண்ணறிவு
ISRO தலைவர் மேலும், "விண்வெளித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் 1962ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கினோம். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா. சந்திரயான் 1, நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தது". "முதலில் ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோளை அனுப்பிய நாடு ரஷ்யா. அந்த சாதனையை முறியடித்து ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவின் இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது. மாணவர்கள் மத்தியில் விண்வெளி ஆய்வில் ஆர்வம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.