ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் புதிய வசதிகளை வழங்கவிருக்கும் ஆப்பிள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தங்களுடைய ஐபோன் 15 சீரிஸ் மாடல் போன்களை வெளியிட்டிருந்தது ஆப்பிள். அந்நிறுவனத்தின் அடுத்த சீரிஸான 16 சீரிஸ் மாடலே அடுத்த வருடம் தான் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், 2025ம் ஆண்டு வெளியாகவிருக்கும் ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் இரண்டு முக்கிய மாற்றங்களை ஆப்பிள் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, புதிய சொந்தமான வைபை சிப் மற்றும் 48MP பெரிஸ்கோப் கேமரா ஆகிய இரண்டு அம்சங்களை ஐபோன் 17 ப்ரோ சீரிஸில் ஆப்பிள் வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள் 17 ப்ரோ சீரிஸில் புதிய வசதிகள்:
அடுத்து ஆப்பிள் வெளியிடவிருக்கும் விஷன் ப்ரோ ஹெட்செட்டுடன் ஒத்துப் போகும் வகையில் 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸை 17 ப்ரோ மாடல்களில் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள். மேலும், ஆப்பிள் சமீபத்தில் ஐஓஎஸ் 17.2 அப்டேட்டில் வழங்கிய ஸ்பேஷியல் வீடியோ ஷூட்டிங் வசதியுடனும் ஒத்தும் போகும் வகையில் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது. சொந்தமான வைபை சிப்பை ஆப்பிள் பயன்படுத்தத் தொடங்கினால், ஆப்பிளுக்கு அதனை சப்ளை செய்யும் பிராட்காம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆப்பிளின் வைபை தரம் முன்பைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த தரத்தை அடையவும் இந்த முயற்சி வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.