ஆப்பிளைத் தொடர்ந்து கூகுள் போன்களுக்கும் தடை விதித்தது இந்தோனேசியா; காரணம் என்ன?
உள்ளூர் உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று கூறி, ஆப்பிள் ஐபோன் 16 விற்பனையை நிறுத்திய இந்தோனேசியா, தற்போது கூகுள் பிக்சல் போன்களின் விற்பனையையும் நிறுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் குறைந்தபட்சம் 40% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பூர்த்தி செய்யவில்லை என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பெப்ரி ஹென்றி அண்டோனி ஆரிஃப் தெரிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடு நாட்டிலுள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஒரு சமமான களத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஆரிஃப் கூறினார். இதற்கிடையே, தனது பிக்சல் போன்கள் இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்படவில்லை என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது.
கூகுள் பிக்சல் சட்டவிரோத விற்பனை
இருப்பினும் நுகர்வோர் அவற்றை வெளிநாட்டில் வாங்கி தேவையான இறக்குமதி வரிகளை செலுத்தலாம். சந்தையில் சட்டவிரோதமாக நுழைவதன் மூலம் இந்த விதிமுறைகளை மீறும் பிக்சல் போன்களை செயலிழக்கச் செய்ய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இந்தோனேசியாவின் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டில் உதிரிபாகங்களை பெறுவதற்கும் அல்லது உள்ளூர் சப்ளையர்களுடன் பங்குதாரராக இருப்பதற்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது. ஆனாலும், இந்த கொள்கை தொழில்துறை ஆய்வாளர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது. பொருளாதாரம் மற்றும் சட்ட ஆய்வு மையத்தின் பீமா யுதிஷ்டிரா, இந்த கட்டுப்பாட்டை போலி பாதுகாப்புவாதம் என்று விமர்சித்தார். இது முதலீட்டாளர் உணர்வு மற்றும் நுகர்வோர் விருப்பத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்று அவர் விமர்சித்துள்ளார்.