Loading...
500 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென வெடித்த எரிமலை! விண்வெளியில் இருந்து படம் பிடித்த இந்தியா-அமெரிக்காவின் நிசார் செயற்கைக்கோள்
500 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எரிமலையை படம் பிடித்த நிசார் செயற்கைக்கோள்

500 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென வெடித்த எரிமலை! விண்வெளியில் இருந்து படம் பிடித்த இந்தியா-அமெரிக்காவின் நிசார் செயற்கைக்கோள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2026
01:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா அமைப்புகள் இணைந்து விண்ணில் செலுத்திய நிசார் செயற்கைக்கோள், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் அமைந்த கிராஷெனின்னிகோவ் என்ற அரிய வகை எரிமலையைப் படம் பிடித்துள்ளது. சுமார் 1550 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 500 ஆண்டுகளாக எவ்வித இயக்கமும் இன்றி அமைதியாக இருந்த இந்த எரிமலை, 2025 ஜூலை மாதத்தில் நிலநடுக்கத்திற்குப் பிறகு திடீரென வெடித்து பாறைக் குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ரேடார் புகைப்படங்கள்

பூமியிலிருந்து 747 கிமீ உயரத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ரேடார் புகைப்படங்கள்

பூமியிலிருந்து சுமார் 747 கிலோமீட்டர் உயரத்தில் வலம் வரும் நிசார் செயற்கைக்கோள், 2025 டிசம்பர் மாதம் முதல் இந்த எரிமலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட 17 ரேடார் படங்களை ஒன்றாக இணைத்து விஞ்ஞானிகள் ஒரு காலவரிசை வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

இதில், எரிமலையின் உட்பகுதியில் இருந்து வெளிவரும் திரவக் குழம்பு படிப்படியாக பிரம்மாண்ட பள்ளத்தை நிரப்பி, விசிறி வடிவத்தில் வெளிப்பகுதியை நோக்கி பரவிச் செல்லும் காட்சிகள் மிகத் தெளிவாக பதிவாகியுள்ளன.

தொழில்நுட்பம்

இரவு, பகல் மற்றும் மேக மூட்டத்தையும் ஊடுருவிப் பார்க்கும் ரேடார் தொழில்நுட்பம்

நிசார் செயற்கைக்கோள் ஒளியியல் கேமராக்களுக்கு பதிலாக செயற்கை துளை ரேடார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

இது பூமியை நோக்கி நுண் அலைகளை அனுப்பி பிரதிபலிக்கும் சமிக்ஞைகளை அளவிடுகிறது.

சூரிய ஒளி அல்லது மேக மூட்டம் எதுவாக இருப்பினும், இரவிலும் பகலிலும் 10 மீட்டர் சுற்றளவிலான நிலப்பரப்பைக் கூட துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது.

இதன் மூலம் பூமியில் இயங்கும் சுமார் 1,300 செயலில் உள்ள எரிமலைகளையும் மிக எளிதாக விண்வெளியில் இருந்து தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

ADVERTISEMENT

பேரிடர் கண்காணிப்பு

இயற்கைப் பேரிடர்களை துல்லியமாகக் கண்டறிய உதவும் புதிய மைல்கல்

எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் என இருவேறு அலைநீளம் கொண்ட ரேடார் கருவிகளுடன் விண்வெளியில் இயங்கும் உலகின் முதல் செயற்கைக்கோள் நிசார் ஆகும்.

தொலைதூரப் பேரிடர் பகுதிகளில் மனிதர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய முடியாத சூழலில், நிசார் வழங்கும் இந்தத் தொடர் தரவுகள் எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்க பெருமளவில் உதவும்.

இந்த சாதனை விண்வெளி ஆராய்ச்சித் துறையிலும், உலகளாவிய பேரிடர் மேலாண்மையிலும் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT