நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம்
இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷ்யா என இரண்டு எதிரெதிர் துருவங்களுடனும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது. கனவுத் திட்டமான ககன்யான் பயணத்தின் சுபான்ஷு சுக்லாவை அமெரிக்காவிலுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்தியா அனுப்பும் அதே வேளையில், தனது நிலவு ஆற்றல் திட்டத்தில் ரஷ்யாவுடன் கூட்டு சேருவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா இப்போது ஆராய்ந்து வருகிறது. இந்த திட்டத்தில் சீனாவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய ரஷ்யாவின் அணுசக்தி கழகத்தின் தலைவர் அலெக்சி லிகாஸ்வ் சீனா மற்றும் இந்தியா இந்த திட்டத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று கூறியதை வைத்து இந்த தகவல் பரவி வருகிறது.
நிலவில் சிறிய அணுமின் நிலையம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, அரை மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு சிறிய அணு மின் நிலையத்தை உருவாக்குவது, அடித்தளத்திற்கு தேவையான சக்தியை வழங்குவதை நிலவு மின் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலவுலக ஆற்றல் தீர்வை உருவாக்குவதில் சீனாவும் இந்தியாவும் ரஷ்ய விண்வெளி அமைப்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக லிகாஸ்வ் கூறினார். அணுமின் நிலையம், ரஷ்யாவும் சீனாவும் இணைந்து செயல்படும் முன்மொழியப்பட்ட நிலவு தளத்திற்கு ஆற்றலை வழங்கும். சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் இந்த கூட்டு நிலவு தளம் 2035 மற்றும் 2045க்கு இடையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.