2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?
கடந்த சில மாதங்களில் இந்திய விண்வெளித்துறையானது புத்துணரச்சி பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் முதல் முறையாக தரையிறங்கியது இந்தியா. மேலும், நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெயரையும் பெற்றது இந்தியா. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ. ஆதித்யா L1 திட்டம் செயல்பாட்டில் இருக்கும் போதே, மனிதர்களை விண்வெளிக்கு கூட்டிச் செல்லும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான சோதனை ஓட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது இந்தியா. இவற்றைத் தொடர்ந்து தற்போது மேலும் சில புதிய திட்டங்களை தீட்ட ஆயுத்தமாகி வருகிறது இந்தியா.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்:
விண்வெளித்துறையில் சிறிய வெற்றிகளைத் தொடர்ந்து பெரிய இலக்குகளை நிர்ணியிக்கவிருக்கிறது இந்தியா. நிலவிற்கு விண்கலத்தையும், விண்வெளிக்கு மனிதர்களையும் அனுப்பவிருப்பதையும் தொடர்ந்து 2040ம் ஆண்டிற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டங்களை இந்தியா தீட்டவிருப்பதாக தெரிவித்திருக்கிறது இந்திய அரசு. மேலும், 2035ம் ஆண்டிற்குள் விண்வெளியில் இந்தியாவிற்கென சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்களை தீட்டு இந்திய விண்வெளி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனையே தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் குறிப்பிட்டிருக்கிறது இந்திய அரசு. மேலும், வெள்ளி மற்றும் செவ்வாய் கோள்களை ஆய்வு செய்வதற்கான புதிய திட்டங்களையும் தீட்ட இந்திய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.