கடவுச்சொற்களை பராமரிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை!
இந்தியாவில் நிதி தொடர்பான திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால், இன்னும் பொதுமக்களுக்கு நிதி திருட்டு சம்பவங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது லோக்கல் சர்வேயின் அறிக்கை ஒன்று. கடந்த 2022-ல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 5,406 நிதி திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இது அதற்கு முந்தைய காலகட்டத்தை விட கிட்டத்தட்ட 25% அதிகம். லோக்கல் சர்வேயின் அறிக்கை, நிதித் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவில்லை, முக்கியமாக டிஜிட்டலாக நடைபெறும் நிதி திருட்டைத் தடுக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது குறைவாகவே இருக்கிறது எனச் சுட்டிக் காட்டுகிறது.
இன்னும் விழிப்புணர்வு தேவை:
டிஜிட்டல் உலகில் நமது நிதி சார்ந்த சேவைக் கணக்குகளை பாதுகாப்பாக வைப்பதில் கடவுச்சொற்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அந்தக் கடவுச் சொற்களை மக்கள் பாதுகாப்பாக வைப்பதில்லை எனக் கூறுகிறது அந்த அறிக்கை. இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட மக்களில் 24% பேர் தங்களுடைய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் பின் நம்பர்கள், வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் அது தொடர்பான கடவுச்சொற்கள் உள்ளிட்ட தகவல்களை தங்களுடைய மொபைல் போனிலேயே சேமித்து வைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அதிலும், 8% பேர் நோட்ஸ் போன்ற ஆப்களிலும், 9% பேர் தொடர்பு பட்டியலிலும் சேமித்து வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 14% பேர் மட்டுமே தங்கள் கடவுச் சொற்களை நினைவில் வைத்துப் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.