செயற்கை வைரம் உருவாக்க ரூ.242 கோடி நிதி! எப்படி உருவாக்கப்படுகிறது?
2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை வைரத்தின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டார். செயற்கை வைரத்தின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு (ஐஐடி) நிதி வழங்க இருப்பதாகவும் தனது உரையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஐஐடி மெட்ராஸ், ஆய்வகத்தால் வளர்க்கப்படும் வைரங்கள் (எல்ஜிடி) பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ஐந்து ஆண்டுகளில் 242 கோடி ரூபாய் மானியமாகப் பெறுவதாக அறிவித்துள்ளது. இவை, இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வைரங்கள் ஒளியியல் மற்றும் வேதியியல் ரீதியாக இயற்கை வைரங்களைப் போன்ற அதே பண்புகளைக் கொண்டுள்ளன.
செயற்கை வைரல் என்றால் என்ன? தயாரிக்கும் முறைகள்;
இயற்கை வைரம் குறைந்துகொண்டே வருவதால் ஆய்வகங்களில் செயற்கை வைரம் உருவாக்கப்படுகிறது. இந்த செயற்கை வைரங்கள் புவியியல் செயல்முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. மேலும், செயற்கை வைரம் பல முறைகளில் தயாரிக்கமுடியும். அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்தை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். குறைந்தபட்சம் 1550 செல்சியஸ் வெப்பநிலையிலும் 7,30,000 பிஎஸ்ஐ அழுத்தத்திலும் செயற்கை வைரம் உருவாக்கப்படுகிறது. செயற்கை வைரத்தை உருவாக்க கிராபைட் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும். சிலவற்றில் கார்பன் கற்கள் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது பட்ஜெட்டில் செயற்கை வைரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்தத்துறை அதிகளவில் வளர்ச்சியடையும் எனக்கூறப்படுகிறது.