நாளை நிகழவிருக்கும் அரிய சூரிய கிரகணம்.. நாம் பார்க்க முடியுமா?
வரும் ஏப்ரல் 20-ம் தேதி அரிய சூரிய கிரகணம் ஒன்று நிகழவிருக்கிறது. பூமிக்கும் , சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வையே சூரிய கிரகணம் என்கிறோம். இதில் முழுமையான சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என வகைகள் இருக்கின்றன. தற்போது நிகழவிருப்பதை கலப்பு சூரிய கிரகணம் என அழைக்கின்றனர். முழுமையான சூரிய கிரகணத்தின் போது, சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்துவிடும். வளைய சூரிய கிரகணத்தின் போது சூரியனை முழுமையாக மறைக்கும் தூரத்தில் சந்திரன் இல்லாமல் கிரகணம் நடைபெறும் நேரத்தில் நெருப்பு வளையம் போன்ற தோற்றம் உண்டாகும். தற்போது நிகழவிருக்கும் கிரகணம் நாம் எங்கிருந்து பார்க்கிறோமோ, அதற்கேற்ப முழுமையாகவோ, வளைய கிரகணமாகவோ தோன்றும். எனவேதான், இதனை கலப்பு சூரிய கிரகணம் என்று குறிப்பிடுகின்றனர்.
எந்த நேரத்தில் நிகழும், இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?
ஏப்ரல் 20-ம் தேதி காலை 10.04 மணிக்கு தொடங்கும் இந்த சூரிய கிரகணம் சுமார் 2 மணி நேரங்கள் நீடிக்கும். மதியம் 11.30 மணிக்கு உச்சநிலையை அடையும். பூமியில் சில பகுதிகளில் இருப்பவர்களுக்கு மட்டும் ஒரு நிமிடம் அல்லது அதற்கும் குறைவான நேரம், முழுமையான சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். இந்த சூரிய கிரகண நிகழ்வை இந்தியாவில் இருப்பவர்களால் கண்டுகளிக்க முடியாது. தெற்கு மற்றும் கிழக்காசியா, ஆஸ்சிரேலியா, பிசிபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா இடங்களில் இருப்பவர்களால் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எக்ஸ்மௌத் என்ற பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த நிகழ்வு முழுமையான சூரிய கிரகணமாகத் தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.