அமெரிக்காவில் வெளியானது ஹ்யூமேன் நிறுவனத்தின் புதிய சாதனமான 'AI பின்'
நீண்ட கால காத்திருப்புக்குப் பின்பு இறுதியாக தற்போது தங்களுடைய முதல் கேட்ஜட்டான 'AI பின்'னை (AI Pin) அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஆதரவு பெற்ற ஹ்யூமேன் (Humane) நிறுவனம். திரையின்றி ஸ்மார்ட்போனின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் புதிய AI பின் சாதனத்தை உருவாக்கியிருக்கிறது ஹ்யூமேன். பயனாளர்களிடமிருந்து கட்டளைகளைப் பெறுவதற்காக AI மைக் ஒன்றையும், பதில்களை அளிப்பதற்கு ஸ்பீக்கர் மற்றும் சிறிய ப்ரொஜெக்டர் செட்டப் ஒன்றையும் கொண்டிருக்கிறது இந்த AI பின். முழுவதுமாக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டுக்கிறது இந்தப் புதிய மின்னணு சாதனத்தின் இயக்கம். இதன் அடிப்படை வசதிகளுள் ஒன்றாக சாட்ஜிபிடியின் பயன்பாட்டையும் கொடுத்திருக்கிறது ஹ்யூமேன்.
ஹ்யூமேன் AI பின்: வசதிகள் மற்றும் விலை
இந்த சாதனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 13MP கேமராவைக் கொண்டு நேரில் நாம் பார்க்கும் பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், இணையத்தில் அதனை வாங்கவும் முடியுமாம். நம்முடைய உடையில் பொருத்திக் கொள்ளும் வகையில் இதனை வடிவமைத்திருக்கும் ஹ்யூமேன், இதன் பயன்பாட்டிற்காக மைக்ரோசாஃப்ட், கூகுள், T-மொபைல், ஓபன்ஏஐ மற்றும் ஸ்லாக் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது. அமெரிக்காவில் 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.58,200) விலையில் இந்தப் புதிய சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஹ்யூமேன். இந்த சாதனத்துடன், இதற்கான கூடுதல் பேட்டர், சார்ஜிங் பேடு, சார்ஜிங் கேபிள் மற்றும் சார்ஜிங் கேஸ் உள்ளிட்டவற்றையும் அளிக்கிறது ஹ்யூமேன். ஸ்னாப்டிராகன் ப்ராசஸரைக் கொண்டிருக்கும் இந்த சாதனத்தின் விற்பனை அமெரிக்காவின் நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது.