சாட்ஜிபிடிக்கு சவால் விடுக்கும் எலான் மஸ்க்கின் புதிய AI சாட்பாட் 'Grok'
'க்ராக்' (Grok) செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட எக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் எலான் மஸ்க். அவருடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான xAI-யே இந்த க்ராக் சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது. சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட எக்ஸ் பயன்பாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் க்ராக்கை, விரைவில் எக்ஸின் அனைத்து ப்ரீமியம்+ பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க். பல்வேறு தரநிலைகளின் அடிப்படையில் சாட்ஜிபிடியின் 3.5 தொழில்நுட்பத்தை விட பல்வேறு வகையிலும் க்ராக் சாட்பாட்டானது சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க். xAI ஆனது தனி நிறுவனமான போதிலும், அதன் மூலம் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை தன்னுடைய எக்ஸ், டெஸ்லா மற்றும் பிற வணிகங்களிலும் பயன்படுத்தவிருக்கிறார் எலான் மஸ்க்.
xAI-யின் 'க்ராக்' சாட்பாட்:
இந்த க்ராக் சாட்பாட்டை பயிற்றுவிப்பதற்காக வேறு மாதிரியான பெரிய மொழி மாதிரியைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சாட்பாட்களைப் போல கேள்விக்கான பதிலை மட்டும் அளிக்காமல், அந்த பதிலை சற்று நகைச்சுவை கலந்து அளிக்கும் என க்ராக் குறித்து தெரிவித்திருக்கிறார் எலான். மேலும், நகைச்சுவை உணர்வுடன் பதிலளிக்கும் போதும் அதன் பதில்களில் தீவிரம் இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த க்ராக் சாட்பாட்டை பயிற்றுவிப்பதற்காக எக்ஸின் தகவல் தளத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். மேலும், எக்ஸின் மூலமே நிகழ்நேரத் தகவல்களையும் இந்த க்ராக்கால் அணுக முடியும் எனவும், அதுவே பிற சாட்பாட்களிடமிருந்து க்ராக்கை வேறுபடுத்திக் காட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.