டிஜிட்டல் அரெஸ்ட் & முதலீட்டு மோசடிகளைத் தடுக்க அரசு-மெட்டா கூட்டணி: 'Scam Se Bacho' தொடர் வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு நிறுவனங்களும் மெட்டாவும் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பிரசார் பாரதி, செபி மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இதில் பங்கேற்றுள்ளன. நவம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்ட 'ஸ்கேம் சே பச்சோ' மைக்ரோடிராமா தொடர் முதலில் இன்ஸ்டாகிராமில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து பிரசார் பாரதியின் வேவ்ஸ் ஓடிடி தளத்திலும் இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
விழிப்புணர்வு
போலி வேலைவாய்ப்பு, முதலீட்டு மோசடிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த விழிப்புணர்வு
குறுகிய கதை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இத்தொடர் அன்றாட வாழ்வில் நடக்கும் பொதுவான டிஜிட்டல் மோசடிகளை மக்களுக்கு எளிமையாக விளக்குகிறது.
குறிப்பாக போலி வேலைவாய்ப்புகள், பங்கு முதலீட்டு மோசடிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் ஆகியவை இதில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் செயல்பாடுகளை அடையாளம் கண்டு தகவல்களை சரிபார்க்க மக்களை இத்தொடர் ஊக்குவிக்கிறது.
மேலும் சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணில் உடனே புகாரளிக்கவும் வழிகாட்டுகிறது.
முதலீட்டாளர் பாதுகாப்பு
கிரியேட்டர் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் விளக்கம்
இந்த கூட்டணி இந்தியாவின் வளர்ந்து வரும் கிரியேட்டர் பொருளாதாரத்திற்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் எனப் பிரசார் பாரதி தலைவர் கௌரவ் திவேதி தெரிவித்துள்ளார்.
மேலும் செபி செயல் இயக்குநர் சஞ்சய் சி புராவ் முதலீட்டாளர்களை நிதி மோசடிகளிலிருந்து பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இத்தொடர் செபியின் முதலீட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் சட்ட அமலாக்க அதிகாரிகள் போல நடித்துப் பணம் பறிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ஐ4சி இயக்குநர் நிஷாந்த் குமார் அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் காமிக் படக்கதை
டிஜிட்டல் காமிக் படக்கதை வெளியீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான சைபர் பாதுகாப்பு
மெட்டாவின் முந்தைய மூன்று விழிப்புணர்வுப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியாக இந்த மைக்ரோடிராமா தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா இந்தியா அதிகாரி அமன் ஜெயின் கூறினார்.
இத்தொடருடன் முதலீடு மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளின் எச்சரிக்கை அறிகுறிகளை விளக்கும் காமிக் படக்கதையையும் மெட்டா வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் சக்ஷம் சீனியர் அமைப்புடன் இணைந்து மூத்த குடிமக்களுக்கான சைபர் பாதுகாப்புப் பிரச்சாரத்தையும் மெட்டா நடத்தியது.
இதன் மூலம் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.