
டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டுவிட்டதா? மத்திய அரசு விளக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) அன்று சில பயனர்கள் டிக் டாக் இணையதளத்தை அணுக முடிவதாகக் கூறியதையடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. "டிக் டாக்-ஐ தடை நீக்கம் செய்வதற்கான எந்த உத்தரவையும் இந்திய அரசு வெளியிடவில்லை. இது தொடர்பான எந்த செய்தியும் தவறானது மற்றும் தவறாக வழிநடத்துகிறது" என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்குப் பிறகு, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக டிக் டாக், வீசாட் (WeChat) மற்றும் ஹெலோ (Helo) உட்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
தரவுகள்
இந்தியர்களின் தரவுகளுக்கு ஆபத்து
இந்த செயலிகள் பயனர் தரவுகளைச் சேகரித்து வெளியே அனுப்புவதாக புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், கல்வான் மோதலுக்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய-சீன உறவுகள் சமீபத்தில் மேம்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. லிபுலேக், ஷிப்கி லா மற்றும் நாது லா கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும், விசா நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ள போதிலும், டிக் டாக் மீதான தடை இன்னும் நீடிக்கிறது.