இந்தியாவில் டீனேஜர்களின் மனநல பாதுகாப்பு மற்றும் பெற்றோர் கட்டுப்பாட்டுக் கருவிகளை விரிவுபடுத்தியது கூகுள், யூடியூப்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கு பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்கும் நோக்கில், கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் புதிய டிஜிட்டல் நலவாழ்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆரோக்கியமான திரை பயன்பாட்டுப் பழக்கங்களை ஊக்குவித்தல், பதின்ம வயதினருக்கு நம்பகமான மனநலத் தகவல்களை வழங்குதல் மற்றும் குழந்தைகளின் இணைய செயல்பாடுகளை பெற்றோர் எளிதாக நிர்வகித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
பிளேலிஸ்ட்
ஆரோக்கியமான திரைப் பழக்கத்திற்கு யூடியூப் 'Youth Digital Wellbeing' பிளேலிஸ்ட்
இதன் ஒரு பகுதியாக குடும்ப நலன் மற்றும் கல்வி சார்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து யூடியூப் 'Youth Digital Wellbeing Playlist' என்ற பிரத்யேக வீடியோ தொகுப்பைத் தொடங்கியுள்ளது.
இதில் திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவது, இரவு நேரத் தூக்க ஒழுங்கைப் பராமரிப்பது, டிஜிட்டல் கவன சிதறல்களைத் தவிர்ப்பது மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை சரியாகக் கையாள்வது குறித்த எளிய ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
புதிய தலைப்புகள் இணைப்பு
13-17 வயதினருக்கான மனநலப் பிரிவில் புதிய தலைப்புகள் இணைப்பு
13 முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினர் மனநலம் குறித்து தேடும்போது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்களால் சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் காட்டப்படுகின்றன.
ஏற்கனவே ADHD, பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகிய தலைப்புகள் இருந்த நிலையில், தற்போது நடத்தை கோளாறு, PTSD, சமூக பதற்றம், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகிய முக்கியத் தலைப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
டிஜிகவாச்
யூடியூப் ஷார்ட்ஸ் நேர வரம்பு மற்றும் 'டிஜிகவாச்' பெற்றோர் கட்டுப்பாட்டு வசதிகள்
மேலும் 'டிஜிகவாச்' (DigiKavach) திட்டத்தின் கீழ் பெற்றோருக்கான கட்டுப்பாட்டுக் கருவிகளை கூகுள் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்படி குழந்தைகள் நீண்ட நேர கல்வி வீடியோக்களை பார்ப்பதைத் தடுக்காமல், யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்கும் நேரத்தை மட்டும் கட்டுப்படுத்தவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ பெற்றோரால் முடியும்.
கூடுதலாக Google Family Link, SafeSearch, Android Parental Controls ஆகியவற்றுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் பெற்றோர் வழிகாட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.