என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது கூகுள் தேடுபொறி?
இதுவரை வெறும் தேடுதல் கருவியாக மட்டும் இருந்து வந்த கூகுள் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்களுடன் நம்முடைய அலுவல்களைச் செய்யும் பணியாளாக மாறவிருக்கிறது அல்லது அப்படித்தான் அதனை அறிமுகப்படுத்துகிறது கூகுள். மைக்ரோசாட்டின் பிங் ஏற்கனவே AI வசதிகளைப் பெற்றிருக்கும் நிலையில், விரைவில் கூகுள் தங்கள் தேடுபொறியில் AI வசதிகளை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த வாரம் நடைபெற்ற I/O நிகழ்வில் அறிவித்திருக்கிறது. தற்போது அனைத்து பயனாளர்களுக்கும் AI வசதியுடன் கூடிய தேடுபொறி வெளியிடப்படவில்லை. எனினும், விரைவில் அது அனைத்து பயனாளர்களுக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது வெளியான பின்பு இணையத்தில் நம்முடைய தேடல் அனுபவமே மாறிவிடும் என்பதற்கு மட்டும் உறுதியளித்திருக்கிறது கூகுள்.
புதிய AI வசதிகளுடன் கூகுள் தேடுபொறி:
"கூகுள் பயனாளர்களில் பெரும்பாலானோர் வெறும் இணையதளங்களுக்கான லிங்க்குகளை மட்டும் தேடவில்லை. அவர்கள் தங்களின் கேள்விக்கான பதிலைத் தேடுகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார் ஜெர்மனைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி. ஆம், பதில்களைத் தான் தேடுகிறோம். இது வரை நமக்கான பதில்களை அந்த லிங்க்குகளில் சென்று கொஞ்சம் கொஞ்சமாக நாமே தேடி வந்தோம். "இனி அந்த வேலையை AI பார்த்துக் கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தில் இன்ஜினியரிங்கின் துணைத் தலைவரான கேத்தி எட்வர்ட்ஸ். இனி கூகுளில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு AI ஒரு பதிலைக் கொடுக்கும், அதனோடு தொடர்புடைய புகைப்படங்களும் முகப்புப் பக்கத்தில் நமக்குக் காட்டப்படும், அதோடு சேர்ந்த நம் சுய தேவைக்காக பயன்படுத்தும் வகையில் லிங்க்குகள் இருக்குமாம்.