யூடியூப் கணக்கு ஹேக் செய்யப்படுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய கருவியை அறிமுகம் செய்தது கூகுள்
கூகுள் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையில் இயங்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக யூடியூப் படைப்பாளிகள் தங்கள் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளுக்கான அணுகலை மீண்டும் பெற உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கான படைப்பாளிகளை கொண்டுள்ள யூடியூப் தளத்தில் கணக்கு ஹேக்கிங்கின் அதிகரித்து வரும் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது. எனினும், இந்த புதிய கருவி தற்போது சோதனை அடிப்படையில் ஆங்கில மொழியில் குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. சோதனைக்கு பிறகு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைப்பு யூடியூபின் விரிவான பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதி
ஏஐ கருவியை யூடியூப்பின் உதவி மையத்தின் மூலம் அணுகலாம் மற்றும் பயனர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களின் கூகுள் உள்நுழைவைப் பாதுகாப்பதன் மூலம் தொடங்கி, மீட்டெடுப்பு செயல்முறையின் மூலம் படிப்படியாக வழிகாட்டுகிறது. இது அவர்களின் கணக்கின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கு முக்கியமானது. சேனலின் பெயரை மாற்றுதல் அல்லது உள்ளடக்கத்தை நீக்குதல் போன்ற ஹேக்கர்கள் செய்யும் மாற்றங்களை மாற்றுவதற்கும் கருவி உதவுகிறது. இந்த கருவியானது, யூடியூபர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான யூடியூபின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். டிஜிட்டல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சகாப்தத்தில் அதன் பயனர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கான யூடியூபின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.