
இந்தியாவில் கூகுள் தவிர்த்த மின்சாதன வேரியன்ட்கள் மற்றும் பிற வசதிகள்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய 'மேடு பை கூகுள்' நிகழ்வின் மூலம் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றையும் உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது கூகுள். இந்தப் புதிய சீரிஸின் கீழ் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு போன்கள் வெளியானது. மேலும், இந்தியாவிலும் அவை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கூறிய நிகழ்வில் கூகுள் அறிமுகப்படுத்திய, பிற நாடுகளில் மட்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது, இந்திய சந்தைக்கு கூகுள் தவிர்த்த சில அறிமுகங்களின் பட்டியல் இது.
ஆம், மேடு பை கூகுள் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவிலும் விற்பனைக்கு வந்தாலும், அவற்றிலும் சிலவற்றை இந்தியாவில் தவிர்த்திருக்கிறது கூகுள்.
பிக்சல் ஸ்மார்ட்போன்
பிக்சல் 8 ப்ரோவின் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்:
பிக்சல் 8 சீரிஸின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களையும் 128GB மற்றும் 256GB வேரியன்ட்களாக வெளியிட்டிருந்தது கூகுள்.
இவற்றுள் பிக்சல் 8 மாடலின் 256GB-யை இந்தியாவில் நாம் வாங்க முடியும். ஆனால் பிக்சல் 8 ப்ரோவின் 256GB மாடலின் விற்பனையை இந்தியாவில் தவிர்த்திருக்கிறது கூகுள்.
பிக்சல் 8 ப்ரோவின் 128GB மாடலே ரூ.1,06,999 விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. 256GB மாடல் என்றால் விலை ரூ.1.2 லட்சத்தைக் கடந்து விடும். சற்று அதிக விலை கொண்ட மின்சாதனங்ளை இந்தியாவில் கூகுள் தவிர்ப்பது இது முதல் முறை அல்ல.
கூகுள்
வேறு எந்த தயாரிப்புகளை தவிர்த்திருக்கிறது கூகுள்?
மேற்கூறிய நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் வாட்ச் 2 LTE வேரியன்டின் விற்பனையையும் இந்தியாவில் தவிர்த்திருக்கிறது அந்நிறுவனம். செல்லுலார் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் ஆப்பிள் விற்பனை செய்யும் நிலையில், கூகுள் அதனைத் தவிர்த்திருக்கிறது.
கூகுள் நிகழ்வில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பட்ஸ் ப்ரோவுக்கான புதிய நிறங்களை அறிவித்தது கூகுள். அதுவும் இந்தியாவிற்கு இல்லை.
அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் பிக்சல் 8 ப்ரோவுடன் பிக்சல் பட்ஸ் மற்றும் பிக்சல் வாட்ச் 2வை இலவச சலுகையாக அளிக்கிறது கூகுள். ஆனால், இந்தியாவில் அது போன்ற சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை.
கூகுளின் பிரத்தியேகமான VPN சேவையானது பிக்சல் போன்களுடன் பிற நாடுகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த முறையும் இந்தியாவில் அந்த சேவை தவிர்க்கப்பட்டிருக்கிறது.