சுற்றுலா பிரியர்களுக்கு சூப்பர் செய்தி! கூகுள் தேடலில் குறைந்த விலையில் பிளைட் டிக்கெட் புக் செய்ய புதிய ஏஐ வசதி
செய்தி முன்னோட்டம்
சுற்றுலா மற்றும் பயணங்களை எளிதாகத் திட்டமிடும் வகையில், கூகுள் தனது ஏஐ மோட் தேடலில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதிகளின் மூலம் பயனர்கள் ஒரே இடத்தில் உரையாடுவதன் மூலம் விமானக் கட்டணங்களை கண்காணிக்கவும், தள்ளுபடி புள்ளிகளைப் பயன்படுத்தவும், ஹோட்டல் அறைகளை நேரடியாக முன்பதிவு செய்யவும் முடியும். 300க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் மற்றும் பயண வலைத்தளங்களின் தகவல்கள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு
விமான கட்டணங்களைக் கண்காணிக்கும் வசதி
கூகுள் பிளைட்ஸின் கட்டணக் கண்காணிப்பு வசதி தற்போது நேரடியாக ஏஐ மோடில் சேர்க்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தாங்கள் செல்ல விரும்பும் இடம் மற்றும் தேதியை ஏஐ மோடில் குறிப்பிடுவதன் மூலம், நேரலை கட்டணங்களை அறியலாம்.
மேலும், அக் குறிப்பிட்ட கட்டணம் குறையும் போது அல்லது மாறும் போது உடனடியாக பயனரின் மின்னஞ்சலுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்படும்.
இந்த சேவை தற்போது 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தள்ளுபடி
தள்ளுபடி புள்ளிகள் (Miles & Points) மூலம் கட்டணத்தைக் கணக்கிடுதல்
விமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் வழங்கும் தள்ளுபடி புள்ளிகளைப் (Miles & Points) பயன்படுத்தி பயணம் செய்வோருக்கு இந்த புதிய அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.
பயனர்கள் தங்களின் குறிப்பிட்ட வெகுமதித் திட்டத்தைக் கூறி (Rewards Program), அதற்கு எவ்வளவு புள்ளிகள் தேவைப்படும் என்பதை ஏஐ மோடில் அறிந்துகொள்ளலாம்.
முதற்கட்டமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஹில்டன், வைன்ட்ஹாம் போன்ற முன்னணி நிறுவனங்களின் வெகுமதி புள்ளிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு
ஏஐ மோட் மூலம் நேரடியாக ஹோட்டல் அறைகள் முன்பதிவு
பயனர்கள் தாங்கள் விரும்பும் தங்குமிடம், வசதிகள் மற்றும் கட்டண வரம்பைக் குறிப்பிட்டால், பயனர்களின் மதிப்பீடுகள் மற்றும் ஒப்பீடுகளுடன் கூடிய ஹோட்டல்களின் பட்டியலை ஏஐ மோட் வழங்கும்.
அதில் தங்களுக்குப் பிடித்த ஹோட்டலைத் தேர்ந்தெடுத்து, கூகுள் பே மூலம் மிக எளிமையாகவும் பாதுகாப்பாகவும் கட்டணத்தை செலுத்தி அறைகளை முன்பதிவு செய்ய முடியும்.
இந்த வசதி முதற்கட்டமாக அமெரிக்காவில் ஆங்கில மொழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.