2026இல் ககன்யான், 2028இல் சந்திரயான் 4; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்
இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான புதிய காலக்கெடுவை இஸ்ரோ தலைவர் சோமநாத் வெளியிட்டுள்ளார். மனிதர்கள் கொண்ட திட்டமான ககன்யான் 2026இல் தொடங்கப்படும் என அறிவித்துள்ள அவர், அதே நேரத்தில் சந்திரனுக்கு சென்று மாதிரி திரும்பும் திட்டமான சந்திரயான் 4, 2028இல் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சியான நிசார் 2025இல் தொடங்கும். ஆல் இந்தியா ரேடியோவில் நடந்த சர்தார் படேல் நினைவு சொற்பொழிவில் பேசும் போது சோமநாத் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதேபோல், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் (ஜாக்ஸா) இணைந்து நிலவில் இறங்கும் பணியான சந்திரயான்-5க்கான திட்டங்களையும் சோமநாத் வெளிப்படுத்தினார்.
சந்திராயன் 5 திட்ட விவரங்கள்
முதலில் LUPEX அல்லது Lunar Polar Exploration என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் 2028க்குப் பிறகு மேற்கொள்ளப்பட உள்ளது. "இது மிகவும் கடினமான பணியாகும், அதில் இந்தியாவால் லேண்டர் வழங்கப்படும். அதே நேரத்தில் ரோவர் ஜப்பானில் இருந்து வரும்." என்று சோமநாத் விளக்கினார். சந்திரயான்-5 திட்டம் முந்தைய பயணங்களை விட மிகவும் சிக்கலானதாக இருக்கும். இந்த பணிக்கான ரோவர் தோராயமாக 350 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இது சந்திரயான் 3இல் பயன்படுத்தப்பட்ட 27 கிலோ ரோவருடன் ஒப்பிடும்போது மிகப்பெரியதாகும். இதற்கிடையே, 2040ஆம் ஆண்டிற்குள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் லட்சிய இலக்கை இஸ்ரோ நிர்ணயித்துள்ளது. ககன்யான் மற்றும் சந்திரயான் 4 உள்ளிட்ட வரவிருக்கும் திட்டங்கள், இந்த இலக்கை அடைவதற்கான முக்கியமான படிகளாக பார்க்கப்படுகிறது.