சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ
சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா-L1 திட்டங்களை திட்டங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான சுக்ரயான்-1 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ. வெள்ளியை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் திட்டம் இது. இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியும் ஆகிய நாடுகள் வெள்ளியை ஆய்வு செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றன. அவற்றுள் 2010ம் ஆண்டு வெள்ளியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக ஜப்பான அனுப்பிய அகாட்சுகி ஆர்பிட்டரானது தற்போதும் வெள்ளியை வலம் வந்து கொண்டிருக்கிறது. வெள்ளியை ஆய்வு செய்யும் சுக்ரயான்-1 திட்டத்தை செயல்படுத்துவதற்கான முடிவை 2012ம் ஆண்டு எடுத்து இந்தியா. 11 ஆண்டுகள் கழித்து, தற்போது அத்திட்டம் செயல்பாட்டு வடிவத்தை அடைந்திருக்கிறது.
ஏன் நாம் வெள்ளியை ஆய்வு செய்ய வேண்டும்:
சூரிய குடும்பத்தில் கிட்டத்தட்ட பூமியின் அளவிலேயே இருக்கும் மற்றொரு கோள் வெள்ளி. ஆனால், அதன் வளிமண்டலமானது பூமியை விட 100 மடங்கு அடர்த்தியானது. மேலும் அது இராசயனங்கள் மற்றும் அமிலங்களால் நிறைந்ததும் கூட. வெள்ளியைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம், பூமியின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வெள்ளியின் வளிமண்டலத்தைப் போல பூமியின் வளிமண்டலமும் மாறுவதற்கான வாய்ப்புகளை நாம் புறம் தள்ளி விட முடியாது. வெள்ளியை தொடர்ந்து பல நாடுகள் ஆய்வு செய்வதற்கு அதுவும் ஒரு காரணம். இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தவிருக்கிறது என்பது குறித்த முழுமையான தகவல்களை இஸ்ரோ இன்னும் வெளியிடவில்லை. எனினும், விரைவில் செயல்படுத்தப்படும் என்று மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.