Page Loader
மார்ச் 29 அன்று 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; நாசா தகவல்
மார்ச் 29இல் 2025இன் முதல் சூரிய கிரகணம்

மார்ச் 29 அன்று 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; நாசா தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2025
12:10 pm

செய்தி முன்னோட்டம்

2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 அன்று நிகழ உள்ளது. இது தோராயமாக நான்கு மணி நேரம் நீடிக்கும். நாசாவின் கூற்றுப்படி, முழுமையாக இல்லாமல் பகுதி அளவில் ஏற்படும் இந்த கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்குத் தொடங்கி மாலை 4.17 மணிக்கு உச்சத்தைத் தாண்டி மாலை 6.13 மணிக்கு முடிவடையும். இந்த பகுதி சூரிய கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் உள்ளிட்ட பல கண்டங்களில் தெரியும். இருப்பினும், இது இந்தியாவில் இருந்து தெரியாது. நிகழ்வின் போது, ​​சந்திரன் சூரியனை ஓரளவு மறைத்து, பூமியில் நிழலை ஏற்படுத்தும்.

பாதுகாப்பு

வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது

சரியான கண் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இது கடுமையான விழித்திரை சேதத்தை ஏற்படுத்தும். சந்திர கிரகணங்களைப் போலல்லாமல், சூரிய கிரகணங்களுக்கு கண் காயங்களைத் தடுக்க சிறப்பு பார்வை உபகரணங்கள் தேவைப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழும் என்று நாசா கணித்துள்ளது. இரண்டாவது சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும். இந்த வான நிகழ்வுகள் இந்தியாவில் இருந்து தெரியவில்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களுக்கு அவை குறிப்பிடத்தக்கவையாகும்.