அபரிமிதமான வளர்ச்சி; மூன்றாவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது ஆப்பிள்
2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி அறிக்கையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இது வால் ஸ்ட்ரீட்டின் எதிர்பார்ப்புகளை கணிசமாக விஞ்சி அதிக வளர்ச்சி கண்டுள்ளது தொழில்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மற்றும் மூத்த துணைத் தலைவரும் தலைமை நிதி அதிகாரியுமான லூகா மேஸ்ட்ரி ஆகியோர் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு, முக்கிய புள்ளி விபரங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 5 சதவீதம் அதிகரித்து 85.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரிவு வாரியாக வருமானம்
ஐபோன் வருவாயில் சிறிதளவு சரிவு இருந்தபோதிலும், இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் $39.67 பில்லியனை ஒப்பிடுகையில் $39.3 பில்லியனாக இருந்தது. எனினும், இது வால் ஸ்ட்ரீட்டின் கணிப்பான $38.81 பில்லியனை விட அதிகமாகும். ஐபேட் விற்பனை கணிசமான வளர்ச்சியைக் கண்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் $5.79 பில்லியனாக இருந்த நிலையில் தற்போது $7.16 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதே நேரம் மேக் வருவாய் மிகவும் குறைந்த அளவில் $7.01 பில்லியனாக அதிகரித்தது. இது வால் ஸ்ட்ரீட்டின் $7.02 பில்லியன் மதிப்பீட்டை விட குறைவாகும். இதற்கிடையே சேவைகள் பிரிவு தொடர்ந்து வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தி, $24.21 பில்லியன் வருவாயை அடைந்தது. இது முந்தைய ஆண்டை விட 14.14 சதவீதம் அதிகமாகும்.