Page Loader
எக்ஸ் மூலம் நிதி சேவைகளை வழங்கத் தயாராகும் எலான் மஸ்க்
எக்ஸ் மூலம் நிதி சேவைகளை வழங்கத் தயாராகும் எலான் மஸ்க்

எக்ஸ் மூலம் நிதி சேவைகளை வழங்கத் தயாராகும் எலான் மஸ்க்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 27, 2023
12:46 pm

செய்தி முன்னோட்டம்

2024ம் இறுதிக்குள் முழுவீச்சுடன் அனைத்து விதமான நிதி சேவைகளையும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க். கடந்த ஆண்டு ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதனை நிதி சேவைகள் உட்பட அனைத்து சேவைகளுக்குமான ஒரே தளமாக உருவாக்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். பேபால் (PayPal) நிறுவனத்தை தொடங்கி போது, அதற்கும் இதேபோன்ற திட்டங்களை வைத்திருந்திருக்கின்றனர் எலான் மஸ்க்கும், பேபாலின் பிற நிறுவனர்களும். ஆனால், பேபால் நிறுவனத்தை விற்ற பிறகு அதனை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. தற்போது அதனை செயல்படுத்தும் முனைப்பில் இருக்கிறார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க்

எக்ஸ் ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட எலான் மஸ்க்: 

எக்ஸ் தளத்தில் அனைத்து விதமான நிதி சேவைகளையும் வழங்கும் இந்தத் திட்டம் குறித்து எக்ஸ் ஊழியர்களுடனான சந்திப்பில் தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். நிதி சேவைகள் என்றால் வெறும் பணப் பரிமாற்றம் மற்றும் கட்டண சேவை வசதி அளிப்பது மட்டுமல்ல, நிதி தொடர்பாக என்னென்ன டிஜிட்டல் வசதிகள் இருக்கின்றனவோ அனைத்தையும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அளிக்க விரும்புகிறார் எலான் மஸ்க். தன்னுடைய சேவையைப் பயன்படுத்தும் பயனாளருக்கு வங்கிக் கணக்கின் தேவையே இருக்கக்கூடாது என்பது தான் எலான் மஸ்க்கின் திட்டம், அதாவது சர்வமும் எக்ஸ் மயம். அமெரிக்காவில் இந்த நிதி சேவையை வழங்குவதற்குத் தேவையான உரிமங்களைப் பெறுவதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் எலான் மஸ்க்.

எக்ஸ்

நன்றும் தீதும்: 

எலான் மஸ்க்கின் இந்தத் திட்டத்தை பலர் வரவேற்றாலும், சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவருடைய அனைத்து வகையான நிதி சார்ந்த தகவல்களும், ஒரே ஒரு நிறுவனத்திடம், ஒரே ஒரு நபரிடம் இருப்பது என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது அவர்களது பயம். மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சட்டங்களே எலான் மஸ்க்கின் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முட்டுக்கட்டையாக இருக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். எந்தவொரு துறையில் போட்டிய அவசியம். போட்டியில்லாமல் ஒரே ஒரு தனிநபர் அனைத்து தகவல்களையும் நிர்வகிப்பதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் ஏற்றுக் கொள்ளாது, அங்கிருக்கும் சட்டங்களும் அதனை அனுமதிக்காது எனக் கூறுகின்றனர்.