Loading...
30 ஆண்டு கால சகாப்தம் முடிவு; பயோவேர் ஸ்டுடியோவை மூடி 400 பேரை பணிநீக்கம் செய்கிறது EA
பயோவேர் ஸ்டுடியோவை மூடி 400 பேரை பணிநீக்கம் செய்கிறது எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ்

30 ஆண்டு கால சகாப்தம் முடிவு; பயோவேர் ஸ்டுடியோவை மூடி 400 பேரை பணிநீக்கம் செய்கிறது EA

எழுதியவர் Sekar Chinnappan
Oct 22, 2026
04:00 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி வீடியோ கேம் வெளியீட்டு நிறுவனமான எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (EA), தனது புகழ்பெற்ற பயோவேர் கேம் டெவலப்மென்ட் ஸ்டுடியோவை மூடுவதாக அறிவித்துள்ளது. 1995-ஆம் ஆண்டு கனடாவில் தொடங்கப்பட்டு 2007-இல் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்ட இந்த ஸ்டுடியோ, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சர்வதேச கேமிங் ரசிகர்களைக் கவர்ந்த ரோல்-பிளேயிங் கேம்களை உருவாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு காரணமாக இந்தத் தீவிர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கம்

400 ஊழியர்கள் பணிநீக்கமும் மாஸ் எஃபெக்ட் ரத்தும்

எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்த பெரியளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக சுமார் 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

இதில் பயோவேர் நிறுவனத்தைச் சேர்ந்த 50 கேம் டெவலப்பர்களும் அடங்குவர்.

மேலும், கேமிங் உலகத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ் எஃபெக்ட் தொடரின் 5-வது புதிய கேமிங் திட்டத்தின் தயாரிப்புப் பணிகளையும் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனம் முழுமையாக ரத்து செய்துள்ளது.

இது உலகம் முழுவதிலும் உள்ள கேமிங் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோல்விகள்

வணிக ரீதியான பின்னடைவுகளும் தோல்விகளும்

பால்டூர்ஸ் கேட், டிராகன் ஏஜ் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற சிறந்த கேம்களை உருவாக்கிய பயோவேர் நிறுவனம், மல்டிபிளேயர் கேம்களை நோக்கிய தனது பயணத்தில் சவால்களை சந்தித்தது.

2019-இல் வெளியான ஏந்தம் கேம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

அதைத் தொடர்ந்து 2024-இல் வெளியான 'டிராகன் ஏஜ்: தி வெயில்கார்டு' கேமும் நிறுவனத்திற்குப் போதிய லாபத்தை ஈட்டித்தரத் தவறியது.

இந்த தொடர் வணிக ரீதியான தோல்விகளே ஸ்டுடியோ மூடப்படுவதற்கு முதன்மைக் காரணியாக அமைந்தன.

ADVERTISEMENT

உரிமை மாற்றம்

நிறுவனத்தின் மிகப்பெரிய உரிமை மாற்றமும் எதிர்காலமும்

சமீபத்தில் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனம் 55 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சவுதி அரேபியாவின் பிஐஎப் நிதி அமைப்பு மற்றும் பிற முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த பெரிய நிதி மாற்றத்திற்குப் பிறகு, நிறுவனம் தனது செலவுகளைக் குறைத்து, அதிக லாபம் தரக்கூடிய ஒருசில பெரிய கேமிங் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

இதன் விளைவாகவே பயோவேர் போன்ற முன்னணி கேமிங் ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT