கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெரிதான ஓசோன் துளை; ஆனாலும் விஞ்ஞானிகள் கவலைப்படாதது ஏன் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
அண்டார்டிகா கண்டத்திற்கு மேலே உள்ள பூமியின் பாதுகாப்பு கவசமான ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளை 2026 செப்டம்பர் 18 அன்று 10.5 மில்லியன் சதுர மைல்கள் என்ற பிரம்மாண்ட அளவை எட்டியுள்ளது. நாசா மற்றும் நோவா அமைப்புகளின் 48 ஆண்டுகால செயற்கைக்கோள் கண்காணிப்பு வரலாற்றில் இது ஏழாவது பெரிய ஓசோன் துளையாக பதிவாகியுள்ளது. செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 13 வரையிலான உச்சகட்ட காலத்தில் இதன் சராசரி பரப்பளவு அமெரிக்காவின் பரப்பளவை விட இரண்டு மடங்கு அதிகமாக 9.6 மில்லியன் சதுர மைல்களாக இருந்தது.
காரணம்
வலிமையான துருவ சுழல் காற்றே தற்காலிக விரிவாக்கத்திற்கு முக்கியக் காரணம்
ஓசோன் துளை இவ்வளவு பெரிதாக விரிவடைந்ததற்கு மனிதர்களின் புதிய மாசுபாடுகள் காரணமல்ல என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அண்டார்டிகா வளிமண்டலத்தில் வீசிய வழக்கத்திற்கு மாறான வலிமையான துருவ சுழல் காற்று, கடும் குளிரான காற்றை அப்பகுதியிலேயே சிறைபிடித்து வைத்திருந்தது.
இதனால் உருவான துருவ அடுக்குமண்டல மேகங்கள், வசந்த கால சூரிய ஒளியுடன் இணைந்து ஓசோன் மூலக்கூறுகளை தற்காலிகமாக சிதைத்ததே இத்துளை விரிவடையக் காரணமாக அமைந்துள்ளது.
சாதகமான அறிகுறிகள்
ஓசோன் படலம் குணமடைந்து வருவதை உறுதிப்படுத்தும் சாதகமான அறிகுறிகள்
துளையின் பரப்பளவு பெரிதாக இருந்தபோதிலும், அதன் தீவிரம் முந்தைய தசாப்தங்களை விடக் குறைவாகவே உள்ளதால் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
கடந்த 2006 அக்டோபரில் ஓசோன் அடர்த்தி 92 டாப்சன் அலகுகளாக சரிந்த நிலையில், 2026 அக்டோபரில் 105 டாப்சன் அலகுகளாக பதிவாகியுள்ளது.
மேலும் 2000-ஆம் ஆண்டில் இருந்ததைப் போல ஓசோனைச் சிதைக்கும் வேதிப்பொருட்கள் தற்போது வளிமண்டலத்தில் இருந்திருந்தால், இந்த ஓசோன் துளை இன்னும் 1 முதல் 2 மில்லியன் சதுர மைல்கள் பெரிதாக இருந்திருக்கும் என நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்பார்ப்பு
மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின் வெற்றியும் 2066-க்குள் முழுமையான மீட்சி எதிர்பார்ப்பும்
கடந்த காலங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏசிகளில் பயன்படுத்தப்பட்ட குளோரோபுளோரோகார்பன் வாயுக்களே ஓசோன் படலத்தை கடுமையாக சேதப்படுத்தின.
ஆனால் 1987-ஆம் ஆண்டு கையெழுத்தான மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின் கீழ் இத்தகைய நச்சு வாயுக்களின் பயன்பாடு உலகளவில் தடை செய்யப்பட்டது.
இதன் விளைவாக வளிமண்டலத்தில் குளோரின் அளவு மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதால், 2066-ஆம் ஆண்டிற்குள் அண்டார்டிகா ஓசோன் படலம் 1980-களின் இயல்பு நிலைக்கு முழுமையாகத் திரும்பும் என விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.