Loading...
மைக்ரோசாஃப்ட் Office, Outlook, Teams முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமா? நிறுவனம் சொல்வது இதுதான்
Office, Outlook, Teams முடங்கியதற்கான காரணம் குறித்து மைக்ரோசாஃப்ட் விளக்கம்

மைக்ரோசாஃப்ட் Office, Outlook, Teams முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமா? நிறுவனம் சொல்வது இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2026
01:42 pm

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அலுவலக பயன்பாட்டு செயலிகளான ஆபீஸ் (Office), அவுட்லுக் (Outlook) மற்றும் டீம்ஸ் (Teams) ஆகியவை வியாழக்கிழமை (நவம்பர் 12) இரவு 11:30 மணி முதல் உலகளவில் கடுமையான தொழில்நுட்ப தடங்கலை சந்தித்தன. டவுன்டிடெக்டர் இணையதளத்தில் மட்டும் அவுட்லுக் சேவை முடங்கியது குறித்து சுமார் 1,30,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. இந்த திடீர் முடக்கத்தால் உலகம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் இந்தியாவின் இன்டிகோ விமான நிறுவனம் ஆகியவற்றின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதல் காரணமல்ல என மைக்ரோசாஃப்ட் நிர்வாக அதிகாரி உறுதி

சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச சைபர் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் முடக்கத்திற்கும் ஹேக்கர்களின் தாக்குதலே காரணமாக இருக்கலாம் என இணையத்தில் வதந்திகள் பரவின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் நிர்வாக அதிகாரி சார்லஸ் லமன்னா எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகத் தெரிவித்த அவர், இந்த சேவைத் தடங்கலுக்கு எந்தவித சைபர் தாக்குதலோ அல்லது தீங்கிழைக்கும் நடவடிக்கைகளோ காரணமல்ல என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வர் சோதனை தோல்வி

சர்வர் ஆரோக்கிய சோதனைத் தோல்வியும் கட்டமைப்பு மாற்றமும் தான் காரணம்

ஆரம்பத்தில் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) கோளாறால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அதனை அமேசான் நிறுவனம் மறுத்தது.

இதையடுத்து மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட அறிக்கையில், சர்வர்களின் தானியங்கி ஆரோக்கிய சோதனைகள் (Automated Health Checks) தோல்வியடைந்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.

இதனால் பல சர்வர்கள் திடீரென செயலிழந்தன.

இதன் காரணமாக மீதமுள்ள சர்வர்களில் அதிகப்படியான இணைய போக்குவரத்து சுமை (Traffic Load) ஏற்பட்டதால், எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் மற்றும் கோபைலட் உள்ளிட்ட சேவைகள் முடங்கின.

ADVERTISEMENT

தவறான நெட்வொர்க்

தவறான நெட்வொர்க் மாற்றத்தைத் திரும்பப் பெற்றுச் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர மைக்ரோசாஃப்ட் பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

பிரச்சினை தொடங்கிய நேரத்தில் செய்யப்பட்ட சமீபத்திய நெட்வொர்க் கட்டமைப்பு மாற்றத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை நிறுவனம் தொடங்கியுள்ளது.

இருப்பினும், சரிசெய்யப்பட்டு மீண்டும் இணைக்கப்படும் சர்வர்கள் அதிகப்படியான பயனர் போக்குவரத்தால் மீண்டும் மெதுவாக செயல்படுவதால், முழுமையான மீட்புப் பணிகளுக்கு சற்று கூடுதல் நேரம் எடுக்கும் என மைக்ரோசாஃப்ட் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT