AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட்
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் சீனா தலையிடும் சாத்தியக்கூறுகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் அச்சுறுத்தல் நுண்ணறிவுக் குழு, சீன அரசின் ஆதரவு சைபர் குழுக்கள், வட கொரிய சைபர் மோசடி நபர்களுடன் இணைந்து குறைந்த அளவில், இந்த குறிப்பிடத்தக்க தேர்தல்களை குறிவைக்கும் என்று எதிர்பார்க்கிறது. "இந்தியா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்கள் தேர்தலை நோக்கி செல்லும்போது, இந்தத் தேர்தல்களை இலக்காகக் கொண்டு சீன சைபர் மோசடி நபர்களின் அதீத செயல்பாடுகளை பார்க்க அதிக வாய்ப்புள்ளது" என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் சீனாவின் AI- உதவியால் தவறான தகவல் பிரச்சாரங்கள்
தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையில் சமூக ஊடக தளங்களில் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்கி விநியோகிக்க, சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. பொதுக் கருத்தில் இத்தகைய உள்ளடக்கத்தின் தற்போதைய தாக்கம் குறைவாக இருந்தாலும், AI-மூலமாக மேம்படுத்தப்பட்ட மீம்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ ஆகியவற்றில் சீனாவின் அதிகரித்து வரும் சோதனைகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கிறது. வரவிருக்கும் உயர்மட்ட தேர்தல்களில் இவை ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறும் என்று மைக்ரோசாப்ட் நம்புகிறது. ஜனவரி மாதம் தைவானின் ஜனாதிபதித் தேர்தலின் போது, AI- கொண்டு தவறான தகவல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீனாவின் முந்தைய முயற்சியையும் இந்த அறிக்கை மேற்கோள்காட்டியுள்ளது.
AI உருவாக்கிய டிவி செய்தி தொகுப்பாளர்கள் மற்றும் சமூக ஊடக மோசடி
AI-யால் உருவாக்கப்பட்ட டிவி செய்தி தொகுப்பாளர்களின் பயன்பாடு, வேட்பாளர்கள் பற்றிய சரிபார்க்கப்படாத கூற்றுகளைப் பரப்புவதையும் மைக்ரோசாப்ட் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த செய்தி அறிவிப்பாளர்கள் டிக்டாக்கை வைத்திருக்கும் சீன நிறுவனமான பைட் டான்ஸ் மூலம் கேப்கட் கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளனர். மேலும், பெய்ஜிங்-ஆதரவு மோசடி நபர்கள், சமூக ஊடக கணக்குகளை பிரித்தாளும் கேள்விகளை எழுப்பி அமெரிக்க வாக்காளர்களை குழப்பும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை குறிவைத்து சீனா உளவுத்துறை சேகரிக்கும் உத்தியாக இருக்கலாம். மைக்ரோசாப்டின் எச்சரிக்கையானது வெள்ளை மாளிகையால் நியமிக்கப்பட்ட குழுவின் சமீபத்திய மதிப்பாய்வுடன் ஒத்துப்போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.