அரசு & வணிகப் பணப் பரிவர்த்தனை தளங்களில் அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனை மற்றும் சைபர் தாக்குதல்; எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான CERT-In நிதித் துறையைத் தாண்டியும் அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவும் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் மற்றும் வணிக கூட்டாளிகளுக்கு பணம் செலுத்தும் தளங்களில் இத்தகைய மோசடிகள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிதீவிர எச்சரிக்கை அறிக்கையில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்களையோ அல்லது இழந்த தொகையையோ CERT-In வெளியிடவில்லை.
பணம் திருடும் நுட்பம்
வணிகப் பதிவுகள் மற்றும் ஒப்புதல் நடைமுறைகளை மாற்றி வழக்கமான வழியில் பணம் திருடும் நுட்பம்
சைபர் தாக்குதலாளர்கள் யாருக்குப் பணம் செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வணிகப் பதிவுகள் மற்றும் ஒப்புதல் ஏற்பாடுகளை அங்கீகாரமின்றி மாற்றியமைத்துள்ளனர்.
பின்னர் வழக்கமான பணப் பரிவர்த்தனை செயல்முறை மூலமே அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பின்னணியில் உள்ள தரவுகள் திருத்தப்பட்டிருந்தாலும் அந்தப் பரிவர்த்தனைகள் வழக்கமான பயன்பாட்டு மற்றும் ஒப்புதல் சோதனைகளை எளிதில் கடந்து சென்றுவிடுகின்றன.
ஒரே சேவை வழங்குநரின் அமைப்புக்குள் பல ஒப்புதல்கள் இருந்தாலும் அந்த அமைப்பு ஊடுருவப்பட்டிருந்தால் போதிய பாதுகாப்பு இருக்காது எனவும் CERT-In சுட்டிக்காட்டியுள்ளது.
ஏஐ கருவிகள் பயன்பாடு
அரசு மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைத் தாக்க ஏஐ கருவிகள் பயன்பாடு
தொழில்நுட்ப சேவை வழங்குநர்களை நம்பியிருக்கும் அரசு நிறுவனங்கள் பணம் செலுத்தும் வழிமுறைகள் மற்றும் பயனாளி மாற்றங்களை சுயாதீன ஆதாரங்களுடன் சரிபார்க்க வேண்டும்.
வாடிக்கையாளர்களின் அமைப்புகளைத் தனித்தனியாகப் பராமரிப்பதோடு பணப் பதிவுகளில் செய்யப்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தொழில்நுட்பத் தளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வணிக நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படுத்தப்படுவதையும் CERT-In கண்டறிந்துள்ளது.
புகாரளிக்க அறிவுறுத்தல்
6 மணி நேரத்திற்குள் CERT-In-க்குத் தகவல் தெரிவிக்கவும் 1930 எண்ணில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல்
கடந்த அக்டோபர் 9 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் நிதித் துறைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைத் தொடர்ந்து இந்தப் புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2022 வழிகாட்டுதல்களின்படி சைபர் பாதுகாப்புச் சம்பவங்கள் கண்டறியப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் நிறுவனங்கள் CERT-In-க்குப் புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்படாத நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து தேசிய சைபர் கிரைம் புகார் தளம் மூலமாகவோ அல்லது 1930 என்ற உதவி எண்ணை அழைத்தோ உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும்.