கொக்கெய்ன் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்
உலகளவில் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போதை வஸ்துவாக அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் போதைப் பொருளாகவும் இருப்பது கொக்கெய்ன் என்று போதைப் பொருள். இந்த போதைப் பொருளானது அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளிலேயே அதிகமாக சட்ட விரோதமாக பயன்பாட்டில் இருக்கிறது. இந்த போதைப் பொருளானது உடலளவிலும் மனதளவிலும் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது. இந்த போதைப் பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாற்று மருந்தைக் கண்டறிய அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு முன் இவ்வாறான ஆராய்ச்சிகளில் பெரியளவில் பலன் கிடைக்காத நிலையில், தற்போது பிரேசிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு ஆராய்ச்சியின் முடிவுகளானது நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கொக்கெய்னுக்கு எதிரான மாற்று மருந்து:
காலிக்ஸ்கோகோ (Calixcoco) என்ற கொக்கெய்னுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள் பிரேசிலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்த தடுப்பு மருந்தானது கொக்கெய்ன் பயன்படுத்துபவரின் உடலில் செலுத்தப்பட்ட பிறகு, உடலில் நுழையும் கொக்கெய்ன் மூலக்கூறுகளுடன் இணையும் வகையிலான எதிர்புரதத்தை உருவாக்குகிறது. இந்த எதிர்ப்புரதம் கொக்கெய்ன் மூலக்கூறுகளுடன் இணைந்தபிறகு அவற்றால் மூளையின் குறிப்பிட்ட பகுதியை அடைய முடியாமல், கொக்கெய்னை உட்கொண்டவரால் போதையை என்ற உணர்வை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அப்படி போதை என்ற உணர்வை அனுபவிக்க முடியாமல் போகும் போது, அது கொக்கெய்னுக்கு அடிமையாதலைக் குறைக்கும் எனத் தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கொக்கெய்னுக்கு எதிரான மாற்று மருந்தா இது?
கொக்கெய்னுக்கு எதிராக இந்தப் புதிய தடுப்பு மருந்தாக விலங்குகளில் இதனை தற்போது பரிசோதனை செய்து நம்பிக்கையான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. அடுத்ததாக மனிதர்களை வைத்து இந்த கொக்கெய்ன் தடுப்பு மருந்து பரிசோதனையை மேற்கொள்ளவிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கொக்கெய்ன் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு மருந்து தான், எனினும் முழுமையாக இதனை பூரண குணம் தரும் தடுப்பு மருந்தாகக் கருத முடியாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். போதைப் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து வெளியே வர மறுவாழ்வு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு கூடுதல் சிகிச்சையாக இதனை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.