மனிதர்களை விட 6 மடங்கு அதிக வேலை! ஜூனியர் ஊழியர்கள் நியமனத்தைக் குறைத்த ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பது குறித்த புதிய ஆய்வு அறிக்கையை ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. "ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு எவ்வாறு மாறுகிறது" என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில், கடந்த மே 2025 முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் ஜூனியர் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான நியமனம் 27 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ ஏஜென்ட்களின் பயன்பாடு அதிகரித்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
6 மடங்கு அதிக வேலை
மனிதர்களை விட 6 மடங்கு அதிக வேலை நேரத்தைப் பதிவு செய்த ஏஐ
ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குள் ஏஐ ஏஜென்ட்கள் மனித ஊழியர்களை விட 6 மடங்கு அதிக வேலை நேரத்தைப் பதிவு செய்து வருகின்றன.
கடந்த மார்ச் 2026-இல் முதன்முறையாக மனிதர்களின் உழைப்பு நேரத்தை ஏஐ ஏஜென்ட்களின் வேலை நேரம் மிஞ்சியது.
தற்போது பொறியியல், சட்டத்துறை, விற்பனை மற்றும் நிதித் துறைகளில் ஏஐ ஏஜென்ட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் ஒரு பொறியாளர் ஒரே நேரத்தில் பல க்ளாட் ஏஐ முகவர்களை நிர்வகிக்கும் புதிய பணிச்சூழல் உருவாகியுள்ளது.
ஊழியர்களுக்கு பாதுகாப்பு
பாதிக்கப்படும் ஊழியர்களுக்காக சிறப்புப் பாதுகாப்பு அமைப்பு
ஏஐ பயன்பாட்டினால் பாதிக்கப்படும் ஊழியர்களைப் பாதுகாக்க ஆந்த்ரோபிக் நிறுவனம் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அமைப்பை நிறுவியுள்ளது.
இதன் மூலம் ஆபத்தில் உள்ள ஊழியர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பொருத்தமான மாற்றுப் பணிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஓராண்டிற்கு மேலாகப் பணியாற்றும் ஊழியர்கள் வேறு துறைகளுக்கு மாற 50 சதவீத கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
பயத்துடன் வாழும் பணியாளர்களால் சிறந்த உழைப்பைக் கொடுக்க முடியாது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடரும் வேலை நீக்கம்
தொழில்நுட்பத் துறையில் தொடரும் வேலை நீக்க அலை
ஆந்த்ரோபிக் மட்டுமின்றி பிற தொழில்நுட்ப நிறுவனங்களிலும் ஏஐ ஏஜென்ட்களின் தாக்கம் பெருமளவில் எதிரொலித்து வருகிறது.
ஆரக்கிள், அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் 323 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1,33,000-க்கும் அதிகமான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளன.
இருப்பினும், ஏஐ பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க அக்சென்ச்சர் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் முயன்று வருகின்றன.