Page Loader
உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்
உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்

உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 23, 2023
10:13 am

செய்தி முன்னோட்டம்

ஒரு காலத்தில் மிகவும் பெரிதாக இருந்த சாதனங்கள் அனைத்தும் இன்று நம்முடைய உள்ளங்கைக்குள் அடங்கி விட்டன. தற்போது இதற்கு அடுத்தபடியாக, உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கும் வந்து கொண்டிருக்கின்றன இந்த சாதனங்கள். ஆம், உலகின் மிகச்சிறிய கேமரா ஒன்றை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்னிவிஷன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம். OV6948 என்ற 0.575X0.575 மிமீ அளவுடைய மிகச்சிறய கேமராவை உருவாக்கியதோடு, வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கேமரா என்ற கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறது ஆம்னிவிஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம். தங்களுடைய OmniBSI+ என்ற பிக்சல் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தப் புதிய கேமராவை தயாரித்திருக்கிறது ஆம்னிவிஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம்.

தொழில்நுட்பம்

எதற்காக இந்த சிறிய கேமரா பயன்படுத்தப்படும்? 

மருத்துவத்துறையில் எண்டோஸ்கோபி செயல்பாடுகளுக்காக இந்த மிகச்சிறிய கேமரா உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்டோஸ்கோபியில் பயன்படுத்தப்படும் பொருட்களை உருவாக்குதில், மறுபயன்பாடு, அதீத பராமரிப்புச் செலவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில், இந்தத் தேவைகளை மேற்கூறிய சிறிய கேமரா பூர்த்தி செய்யும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஆம்னிவிஷன். மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்படுவதால், இதனை ஒருமுறை பயன்படுத்திய பிறகு மறுபயன்பாட்டிற்கான தேவையில்லை. இதனால், பராமரிப்புச் செலவும் இல்லை. குறைந்த செலவில் உருவாக்கப்பட்டாலும், அதிக திறன் கொண்ட சென்சார்களையே இந்த சிறிய கேமராவில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், இதன் பயன்பாடு உடலின் உள்ளுறுப்புகளைப் பாதிக்காத வகையிலும் இது வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.