புதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்கவிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வாயேஜர் ஸ்பேஸ் நிறுவனம்
அமெரிக்காவின் வாயேஜர் ஸ்பேஸ் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஸ்டார்லேப்ஸ் என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கவிருக்கின்றன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையமானது (ISS) வரும் 2030-ம் ஆண்டு வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது நாசா. அதனைத் தொடர்ந்து, 2031-ம் ஆண்டின் முற்பகுதியில் அதனை செயலிழக்கச் செய்யவிருக்கிறது அந்நிறுவனம். 1998-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதையடுத்து, புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கி செயல்படுத்தும் நாசாவின் 160 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தை வாயேஜேர் ஸ்பேஸ் நிறுவனம் கைப்பற்றியது. முதலில் டிசைனுக்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்கவிருந்த ஏர்பஸ் நிறுவனம், தற்போது அந்த விண்வெளி நிலையத்தைக் கட்டமைப்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கவிருக்கிறது.
புதிய விண்வெளி நிலையமாகும் ஸ்டார்லேப்ஸ்:
ஏர்பஸ்ஸூடன் இணைந்தே இந்தப் புதிய ஸ்டார்லேப்ஸ் விண்வெளி நிலையத்தை உருவாக்கினாலும், அதன் செயல்பாடுகளை தங்கள் நிறுவனமே பார்த்துக் கொள்ளவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் வாயேஜர் ஸ்பேஸ் நிறுவனத்தின் சிஇஓ டைலன் டெய்லர். புதிய ஸ்டார்லேப்ஸ் விண்வெளி நிலையத்தை 2028-ம் ஆண்டு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், இதனை பூமியின் குறைந்த உயர சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தவிருக்கின்றனர். உலக நாடுகளின் விண்வெளி அமைப்புகளை தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், வணிக நோக்கத்துடனும் ஸ்டார்லேப்ஸ் விண்வெளி நிலையத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது வாயேஜர் ஸ்பேஸ். விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டதில் இருந்து, தொடர்ந்து அதில் விண்வெளி வீரர்கள் பணிபுரிவதை உறுதி செய்வதாகத் தெரிவித்திருக்கிறது வாயேஜர் ஸ்பேஸ். 2031-ம் ஆண்டு ISS-ஐ செயலிழக்கச் செய்து பசிபிக் பெருங்கடலில் விழவைக்கத் திட்டமிட்டு வருகிறது நாசா.