2025 ஜனவரி முதல் பிரைம் வீடியோவுக்கான பயன்பாட்டு விதிகளில் திருத்தம்; அமேசான் அறிவிப்பு
அமேசான் இந்தியா தனது பிரைம் வீடியோ செயலிக்கான விதிமுறைகளை ஜனவரி 2025 முதல் திருத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரைம் வீடியோ தளம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு மின்னஞ்சல் மூலம் விதிமுறைகளைத் தெரிவித்தது. புதிய கொள்கையானது ஒரு பிரைம் மெம்பர்ஷிப்பை அதிகபட்சம் ஐந்து சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யும் வகையில் கட்டுப்படுத்தும். அதில் இரண்டு மட்டுமே தொலைக்காட்சிகளாக இருக்க முடியும். அதாவது பிரைம் வீடியோவிற்கு இரண்டுக்கும் மேற்பட்ட டிவிகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் ஒவ்வொரு கூடுதல் டிவிக்கும் கூடுதல் சந்தாவைப் பெற வேண்டும். தற்போதைய கொள்கையின்படி, பிரைம் உறுப்பினர்கள் சாதன வகைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஐந்து சாதனங்களில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் பிரைம் உறுப்பினர் விலை மற்றும் நன்மைகள்
புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்ததும், பிரைம் வீடியோ செட்டிங்ஸ் பக்கத்தில் பயனர்கள் பதிவுசெய்யப்பட்ட சாதனங்களை நிர்வகிக்கலாம் அல்லது கூடுதல் சாதன அணுகலுக்கு மற்றொரு பிரைம் மெம்பர்ஷிப்பை வாங்கலாம். அமேசான் வெவ்வேறு விலைப் புள்ளிகளில் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது: மாதந்தோறும் ₹299, காலாண்டுக்கு ₹599 மற்றும் ஆண்டுக்கு ₹1,499. பிற விருப்பங்களில் வருடாந்திர பிரைம் லைட் (₹799) மற்றும் பிரைம் ஷாப்பிங் பதிப்பு (₹399/ஆண்டு) ஆகியவை அடங்கும். ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கையின்படி, ஐந்து சாதனங்களில் (இரண்டு டிவிகள் வரை) வரம்பற்ற விளம்பரமில்லா வீடியோ ஸ்ட்ரீமிங் பலன்களில் அடங்கும்.