சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட விண்வெளி நடை
நவம்பர் 1ம் தேதியன்று காலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே இரு பெண் விண்வெளி வீரர்கள் மட்டும் விண்வெளி நடையை மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது நாசா. பெண்கள் மட்டுமே விண்வெளி நடையை மேற்கொள்வது அரிதாகவே நடைபெறும். அந்த வகையில், நாசாவின் இரண்டு விண்வெளி வீராங்கணைகளான ஜாஸ்மின் மோபெலி மற்றும் லோரல் ஓஹரா ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே விண்வெளி நடையை மேற்கொண்டனர். அதன் பின்னர் விண்வெளி நடைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய உடற் பரிசோதனைகளை இருவரும் நேற்று மேற்கொண்டதாக தங்களுடைய வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறது நாசா.
நாசாவின் எக்ஸ்பெடிஷன் 70 குழு:
மேற்கூறிய விண்வெளி வீராங்கணைகள் இருவரும் நாசாவின் எக்ஸ்பெடிஷன் 70 குழுவின் ஒரு அங்கமாக இருப்பதோடு, இருவருமே இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்திருக்கிறார்கள். விண்வெளி நடையைத் தொடர்ந்து, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் விண்வெளி வீராங்கணை மோபெலி. நாசாவின் எக்ஸ்பெடிஷன் 70 குழுவானது, நுண்புவியூர்ப்பு விசையால் மனிதர்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, இதய ஆரோக்கியம், புற்றுநோய் சிகிச்சைகள், விண்வெளியில் தயாரிப்புகளை மேற்கொள்வதற்கான நுட்பங்கள் ஆகியவை குறித்தும் இந்த எக்ஸ்பெடிஷன் 70 குழுவானது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.