நிலவை நோக்கி சந்திரயான் 3-இன் பயணத்துளிகள்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, சிறிதும் மனம் தளராமல், இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய அடுத்த திட்டம் தான் சந்திரயான் 3. 2 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்டு வந்த இந்த ஆராய்ச்சி விண்கலம், சில நாட்களுக்கு முன்னர் விண்ணில் பாய தயார் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஜூலை 14 ஆம் தேதி என நாள் குறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விண்கலம் மற்றும் அதனை கொண்டுசெல்லும் ராக்கெட்டின் பாகங்கள் அனைத்தும், ஸ்ரீஹரிகொட்டாவிலிருக்கும், சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, இணைக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் சோதனை ஓட்டம் துவங்கியது.
இன்று, ஜூலை 14 நிலவை நோக்கி பயனப்பட்டது சந்திரயான் 3
சென்ற வாரம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், எரிவாயு நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்னர் ராக்கெட் ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ரீவேர்ஸ் கௌண்ட் டௌன் தொடங்கியது. இன்று சரியாக 2 :35 மணிக்கு விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான் 3. LVM3 ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து சரியாக 108-வது நொடியில், L110 நிலை செயல்படத்தொடங்கியதையடுத்து, 127-வது நொடியில் இரண்டு S200 பூஸ்டர்களும் தனித்து விடப்பட்டன. பின்னர், சரியாக 306வது நொடியில் இரண்டாம் நிலை இன்ஜினான L110 தனித்து விடப்பட்டு, 308-வது நொடியில் வெற்றிகரமாக C25 இன்ஜின் செயல்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து, 3 மணிக்கு "குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான்-3", என இஸ்ரோ அறிவித்தது.